Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM

பவுண்டரிகள் அடிக்கக்கூடிய பந்துகளாக வீசிவிட்டனர் : பந்து வீச்சாளர்கள் மீது தோனி அதிருப்தி

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவுண்டரிகள் அடிக்கக்கூடிய பந்துகளாக தங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் வீசிவிட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி. 188 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணியானது, ஷிகர் தவண் 54 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 85 ரன்களும் பிரித்வி ஷா 38 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 72 ரன்களும் விளாச எளிதாக வெற்றி பெற்றது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.3 ஓவர்களில் 138 ரன்கள் விளாசியிருந்தது.

சென்னை அணியின் பந்து வீச்சில் டுவைன் பிராவோ மட்டுமே சிறப்பாக செயல்பட்டிருந்தார். 4 ஓவர்களை வீசிய அவர் 28 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். ஷர்துல் தாக்குர் 3.4 ஓவர்களை வீசி 53 ரன்களை வாரி வழங்கினார். சேம் கரண் 2 ஓவர்களை வீசி 24 ரன்களையும், தீபக் ஷகார் 4 ஓவர்களில் 36 ரன்களையும், மொயின் அலி 3 ஓவர்களில் 33 ரன்களையும் தாரை வார்த்தனர். மேலும் பிரித்வி ஷா 38 மற்றும் 48 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை மிட்செல் சாண்ட்னர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தவறவிட்டனர். இதற்கான விளைவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்தது.

தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கூறும்போது, “பனிப்பொழிவை சார்ந்தே பந்துவீச்சு அமையும். தொடக்கத்தில் இருந்து இதை மனதில் வைத்தே அதிக ரன்கள் சேர்க்க விரும்பினோம். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு 188 ரன்கள் சேர்த்தனர். பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். பந்துவீசிய விதம் மோசமாக இருந்தது. பவுண்டரிகள் அடிக்கக்கூடிய பந்துகளாக வீசினர். ஆனால் பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொண்டிருப்பார்கள். அடுத்து வரும் ஆட்டங்களில் அதை பயன் படுத்துவார்கள். ஆட்டம் 7.30 மணிக்கு தொடங்குவதால் எதிரணியினருக்கு அரை நேரம் கிடைக்கிறது. ஆடுகளம் சிக்கலானதாக இருக்கும்போது பந்துகள் நின்று வருகின்றன.

எனவே பாதுகாப்பாக இருக்க 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக நாம் பெறவேண்டும். பனிப்பொழிவு தொடர்ச்சியாக இருந்தால் இதுபோன்ற ஆடுகளங்களில் 200 ரன்கள் எடுக்க வேண்டியது அவசியம். டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் சிறந்த திசையில் பந்துகளை வீசினர். பந்துகள் நின்று வந்தாலும் தையல் பகுதியின் உதவியுடன் எங்களது தொடக்க வீரர்களுக்கு நல்ல பந்துகள் வீசப்பட்டது. அதில் அவர்கள் ஆட்டமிழந்தனர். விளையாட்டில் இது நடக்கக்கூடியதுதான்" என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 16ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x