Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM

ஜம்மு காஷ்மீரில் சிறுவன் உட்பட 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை :

 நகர்: காஷ்மீரில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டைகளில் சிறுவன் உட்பட 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் சோபியான் மாவட்டம் ஹடிபோரா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை அங்கு போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மறைந்திருந்த தீவிரவாதிகள் சுட்டதில் பாதுகாப்பு படையின் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். பல மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு சிறுவன் உட்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இறந்த சிறுவன் ஒருவாரம் முன்பு காணாமல் போனான். தீவிரவாத குழுவில் அவன் இணைந்துவிட்டதாக தெரியவந்தது. அந்த சிறுவனை மீட்டுத் தருமாறு அவனது பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தீவிரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த 14 வயது சிறுவன் தனது பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளான். ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டு விட்டதாகவும் தன்னைக் காப்பாற்றுமாறும் பெற்றோரை கேட்டுக் கொண்டுள்ளான். இதுபற்றி போலீசாருக்கு தெரியவந்ததும் சிறுவனின் பெற்றோரை தீவிரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் சிறுவனை சரணடையுமாறு கோரிக்கை விடுத்தனர். எனினும் கூட இருந்த தீவிரவாதிகள் சிறுவனை சரணடையவிடாமல் தடுத்துவிட்டதாகவும் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிறுவன் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாகவும் போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்தார்.

இதனிடையே, அனந்தநாக் மாவட்டத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் இருவரும் சமீபத்தில் ராணுவ வீரர் முகமது சலீம் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 4 இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டைகளில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x