Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கரோனாவை தடுக்க - பாதுகாப்பு உபகரணங்கள் தர கோரிக்கை :

சென்னை

தமிழகத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போதிய அளவில் கையுறைகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது மீண்டும் கரோனா அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் தினசரி பாதிப்பு உயர்ந்துள்ளது. இதனால், சேவைத் துறையில் உள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றிட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மாநில அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க (எஸ்விஎஸ் - ஏஏபி) மாநிலத் தலைவர் ஆர்.எம்.சுவாமி, மாநிலச் செயலாளர் கே.அன்பழகன் ஆகியோர் நேற்று கூறியதாவது:

கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது, போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களுக்கு ஒருமுறை மட்டுமே முகக்கவசம் மற்றும் கையுறை வழங்கப்பட்டது. மாற்று முகக்கவசம், கையுறை வழங்கப்படவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சானிடைசர் மட்டும் வழங்கப்படுகிறது. பேருந்து நிலையங்கள், பணிமனைகளில் கழிவறை, ஓய்வறை போன்றவை சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்கப்படவில்லை.

கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை மற்றும் சிகிச்சை காலத்துக்கான சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும். சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடையும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள சிறப்பு காப்பீட்டு திட்டத்தை நடைமுறைபடுத்த ஆவண செய்ய வேண்டும். கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x