Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM

மேற்கு வங்கத்தில் 4-ம் கட்ட தேர்தலில் பயங்கர வன்முறை - துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழப்பு : வன்முறை கும்பல் தாக்கியதில் பாஜக தொண்டர் மரணம்

மேற்கு வங்கத்தில் நேற்று நடந்த 4-ம் கட்ட தேர்தலில் பயங்கர வன்முறை வெடித்தது. வன்முறை கும்பல் தாக்கியதில் பாஜக தொண்டர் உயிரிழந்தார். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 44 தொகுதிகளில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இந்த தொகுதிகளில் 15,940 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்துமே பதற்றம் நிறைந்தவையாக அறிவிக் கப்பட்டிருந்ததால், அங்கு மத்திய படையைச் சேர்ந்த 789 கம்பெனி வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு விறுவிறுப்பாகவும், அமைதி யாகவும் நடந்து வந்தது.

கூச்பெஹாரின் சிட்லக்குச்சி தொகுதி யில் உள்ள 126-வது வாக்குச்சாவடிக்குள் நேற்று பகல் 11.45 மணி அளவில் 300-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வாக்குப் பதிவு நடந்த அறைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்களும், சிஆர்பிஎப் படை யினரும் தடுத்து நிறுத்தினர்.

துப்பாக்கிகளை பறிக்க முயற்சி

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், பொதுமக்களை இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியது. இதில் ஏராளமானோர் காய மடைந்தனர். அவர்களில் ஆனந்த வர்மன் (20) என்ற முதல்முறை வாக் காளர் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். அவர் பாஜக தொண்டர் என கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, வன்முறை கும் பலை சிஆர்பிஎப் படையினர் தடியடி நடத்தி கலைக்க முற்பட்டனர். அப்போது சிஆர்பிஎப் படையினர் மீதும் தாக்குதல் நடத்திய கும்பல், அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை பறிக்க முயன்றனர். இதையடுத்து, தற்காப்புக்காக சிஆர்பிஎப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், வன்முறை கும்பலைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த கும்பல் வாக்குச்சாவடிக்குள் கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடி விட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்கள், திரிணமூல் காங்கிரஸை சேர்ந்தவர்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் இருந்த வாக்காளர்கள் அனைவரும் சிதறி ஓடினர். அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

மேற்கு வங்கத்தில் இதுவரை நடந்த 3 கட்ட தேர்தல்களும் அமைதியாக நடந்த சூழலில், 4-ம் கட்ட தேர்தலில் கடும் வன்முறை நிகழ்ந்திருப்பது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவு

இதனிடையே, வன்முறை நிகழ்ந்த 126-வது வாக்குச்சாவடியை தேர்தல் அதிகாரிகள் நேற்று மாலை பார்வை யிட்டனர். அங்கு மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மோடி - மம்தா பரஸ்பர குற்றச்சாட்டு

சிலிகுரியில் நேற்று மதியம் நடந்த பிரச்சாரத்தின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘தோல்வி பயம் காரணமாக, தேர்தலை சீர்குலைக்கும் செயல்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். பாஜகவுக்கு பெருகி வரும் மக்கள் ஆதரவால், அச்சத்தில் உறைந்திருக்கும் மம்தா பானர்ஜி, தனது தொண்டர்களை தூண்டிவிட்டு இதுபோன்ற செயல்களை செய்ய உத்தரவிட்டிருக்கிறார்’’ என்றார்.

ஹிங்கல்கஞ்ச் பகுதியில் நடந்த பிரச் சார கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, ‘‘தேர்தலில் வாக்களிக்க வந்த அப்பாவி வாக்காளர்கள் 4 பேரை சிஆர்பிஎப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தர வின்பேரில் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x