Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதில் சுணக்கம் - மதுரை விமான நிலையம் ‘டேக் ஆஃப்’ ஆகுமா? - முட்டுக்கட்டை போடும் மிகப்பெரிய ‘அரசியல் லாபி’

ரவீந்திரன்

மதுரை

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்ற விமானநிலையமாக மதுரை உள்ளது. ஆனால், தற்போது வரை மதுரை விமானநிலையம், ஒரு சுங்க விமான நிலையமாக (customs airport) மட்டுமே செயல்படுகிறது. சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு மதுரையில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டாலும் பன்னாட்டு விமானநிலையமாக இன்னும் மாறவில்லை. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் உள்நாட்டு விமான நிலையமாகவே நீண்ட காலமாக உள்ளது.

சர்வதேச விமான நிலையங்களுடன் விமானப் போக்குவரத்து தொடர்பாக ஒப்பந்தம் செய்து 24 மணி நேரமும் செயல்பட்டால் மட்டுமே வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் விமா னங்களை மதுரைக்கு இயக்க முடியும். ஆனால், மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளவில்லை. இதனால், தற்போது சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து கூடுதலாக விமானங்களை இயக்க சில வெளிநாட்டு நிறுவனஙகள் தயாராக இருந்தும், அதை செயல்படுத்த முடியவில்லை.

அதேநேரம் திருச்சி விமான நிலையம் அனைத்து சர்வதேச விமானநிலையங் களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு, உள்நாட்டு விமான நிறுவனங்கள் நேரடியாக அங்கிருந்து எந்த நாட்டுக்கும் விமானங்களை இயக்க முடியும் என்ற நிலை உள்ளது.

மதுரை விமான நிலையத்திலிருந்து தற்போது இந்தியன் ஏர்லைன்ஸ், ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் மட்டுமே சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு விமானங்களை இயக்குகின்றன. மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையங்களுடன் விமானப் போக் குவரத்தில் சேர்ப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந் தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விமானங்களை இயக்க முடியும்.

மேலும், தற்போதுள்ள வசதிகள் மற்றும் விமானப் போக்குவரத்து ஒப்பந்த அடிப்படையில் சிங்கப்பூர், இலங்கை மற்றும் உள்நாட்டில் சென்னை, பெங் களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மதுரையில் இருந்து அதிக விமானங்கள் இயக்க முடியாமல் போவதற்கு, 24 மணி நேரமும் விமான நிலையத்தை செயல்படுத்தும் வகையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

தற்போது பாதுகாப்புப் பணிக்காக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை யைச் (சிஐஎஸ்எஃப்) சேர்ந்த குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களே உள்ளனர். வெறும் 280 பேர் மட்டுமே உள்ளதால், மதுரை விமான நிலையம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு ஷிப்ட் மட்டுமே செயல்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் போதிய வீரர்கள் இல்லாததால் பாதுகாப்பு குறைபாடுகளை காரணமாகக் கூறி விமானங்களை இயக்க முடியவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட இதே காரணத்துக்காக சிங்கப்பூருக்கு இயக்கப்பட்டு வந்த 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தற்போது கூடுதல் சிஐஎஸ்எஃப் வீரர்கள் கேட்டு மதுரை விமானநிலையத்தில் இருந்து இந்திய விமானத் துறை ஆணையத்தின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கூடுதல் வீரர்கள் வழங்குவதற்கு விமான போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அமைச்சம் மூலம் மதுரை விமானநிலையத்தில் செக்கியூரிட்டி சர்வே மேற்கொள்ள வேண்டும். அதில், மூன்றாவது ஷிப்ட் தொடங்குவதற்கு எத்தனை பேர் தேவை என்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்பினால் மட்டுமே கூடுதல் சிஐஎஸ்எஃப் வீரர்கள் மதுரை விமானநிலையத்துக்கு நியமிக்கப்படுவார்கள். ஆனால், இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளூர் அமைச்சர்களும், மற்ற மக்கள் பிரதிநிதிகளும் மத்திய அரசை வலியுறுத்தவில்லை. இதனால், தற்போது இரவு 10 மணிக்கு மேல் எந்த விமானமும் இயக்க முடியவில்லை. விமானநிலையம் இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

ஓடுதளம் விரிவாக்கம்

மதுரை விமானநிலையத்தில் ஓடு தளத்தை விரிவாக்கம் செய்யும் பணி நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. இப்பணி நிறைவடைந்தால், 300 பேர் வரை அமரக்கூடிய பெரிய விமானங்கள் மதுரை விமானநிலையத்துக்கு வந்து செல்ல முடியும்.

தற்போது 180 பயணிகள் அமரக்கூடிய சிறிய விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதிக பயணிகள் அமரும் பெரிய விமானங்களை இயக் கும்போது, விமானநிலையத்துக்கான வருவாய் அதிகரிக்கும்.

சுற்றுலா வளர்ச்சி

மதுரைக்கு அருகில் பழநி, ராமேசுவரம், மூணாறு, கொடைக்கானல், தேக்கடி போன்ற இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு வரவி ரும்பும் வெளிநாட்டுப் பயணிகள், தற் போது சென்னை அல்லது திருச்சிக்கு வந்து, அங்கிருந்துதான் மதுரை விமான நிலையத்துக்கு வருகின்றனர்.

24 மணிநேரமும் செயல்படக் கூடிய வகையில் சர்வதேச விமான நிலையமாக மதுரை செயல்படத் தொடங்கினால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் நேரடியாக மதுரைக்கு வர முடியும். மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலா வளர்ச்சி அடையும்.

அதோடு, மதுரை - தூத்துக்குடி இண்டஸ்ட்ரியல் காரிடர் திட்டமும் செயல்படுத்தப்படும்பட்சத்தில் தென் மாவட்டங்கள் தொழில் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். மதுரை விமான நிலையத்தில் போதிய சிஐஎஸ்எஃப் வீரர்களை நியமித்தல், ஓடுதளத்தை விரிவாக்கம் செய்தல், சர்வதேச விமானப் போக்குவரத்து ஒப்பந் தத்தை விரைவுபடுத்துதல் ஆகியவை தொடர்பாக தென் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்சியாக அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்றினால் மட்டுமே மதுரை விமான நிலையம் சர்வதேச அளவில் ‘டேக் ஆஃப்’ ஆகும்.

யாருமே முயற்சி செய்யவில்லை!

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறியதாவது:

சர்வதேச விமான நிலையமாக்குவதற்கு மக்கள் பிரதிநிதிகள் யாருமே முயற்சி செய்யவில்லை. அனைத்து வேலைகளுமே அப்படியே கிடக்கிறது. தற்போது விமானநிலைய இயக்குநரும் மாற்றப்பட்டு, புதிதாக ஒருவர் வர உள்ளார். 2019-ம் ஆண்டு 13 லட்சம் பயணிகள் மதுரை விமானநிலையத்துக்கு வந்துள்ளனர். கரோனா பரவிய நேரத்திலும் 2020-ம் ஆண்டு 9 லட்சம் பயணிகள் வந்துள்ளனர். கடைசி 4 ஆண்டுகளில் விமானநிலைய பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

இரவு நேர விமானங்களை இயக்குவதற்கு 2019-ம் ஆண்டு பெரும் முயற்சி செய்து, கூடுதல் சிஐஎஸ்எஃப் வீரர்களை நியமனம் செய்ய ஏற்பாடு செய்தோம். ஆனால், விமான நிறுவனங்கள், மதுரைக்கு விமானங்களை இயக்க ஆர்வம் காட்டவில்லை என்று காரணம் கூறி, சில வீரர்களை விமானநிலைய நிர்வாகம் திருப்பி அனுப்பியது. விமான நிறுவனங்களை கேட்டால் விமானநிலையம் தரப்பில் இருந்து இரவு நேர விமானங்களை இயக்க கடிதம் தரவில்லை என்ற கூறுகின்றனர். தற்போது பிரச்சினை மீண்டும் தொடங்கிய இடத்திலேயே வந்து நிற்கிறது. 24 மணி நேரமும் விமானங்களை இயக்கினால்தான், மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

டிராவல்ஸ் கிளப் ரவீந்திரன் கூறுகையில், தென் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஆண்டுக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் செல்கின்றனர். மலேசியாவுக்கு ஆண்டுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் செல்கின்றனர். சிங்கப்பூருக்கு 95 ஆயிரம் பேரும், ஓமனுக்கு 70 ஆயிரம் பேரும், சவுதி அரேபியாவுக்கு 65 ஆயிரம் பேரும் செல்கின்றனர்.

சர்வதேச விமானநிலையமாக மதுரையை மாற்றினால் பின்தங்கிய தென் மாவட்டங்கள் தொழிற்துறை, சுற்றுலாத்துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் என்று கூறினார்.

மதுரைக்கு ஏன் இந்த பாரபட்சம்?

தென் இந்தியாவில் மதுரையை விட குறைந்த பயணிகளை கையாளக்கூடிய திருப்பதி, கண்ணூர் போன்ற சிறிய விமானநிலையங்கள் கூட சமீபத்தில் சர்வதேச விமான நிலையங்களாக செயல்படத் தொடங்கிவிட்டன. ஆனால், அதைவிட அதிக அளவு பயணிகள் வந்து செல்லும், மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமானநிலைய அந்தஸ்து கிடைக்காமல் இருப்பதற்கு திருச்சி விமான நிலையமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டால் திருச்சி விமான நிலையத்துக்கு பயணிகள் வரத்து வெகுவாக குறைந்துவிடும் என்று அங்குள்ள அரசியல்வாதிகளும், தொழில்முனைவோரும் கருதுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக நடக்கும் மிகப் பெரிய அரசியல் லாபியே மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கும், தரம் உயர்த்தப்படுவதற்கும் முட்டுக்கட்டையாக உள்ளது. இதைத் தெரிந்தும், தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், மதுரை விமானநிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை என்று மதுரை மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும், சர்வதேச விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தில் மதுரை சேர்க்கப்பட்டால் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இன்னும் குறைவான விலைக்கு டிக்கெட்டுகளை தர முன்வருவார்கள். இது உள்ளூர் விமான நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாகவும், சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x