Published : 11 Apr 2021 03:18 AM
Last Updated : 11 Apr 2021 03:18 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - மக்கள் நீதிமன்ற சிறப்பு முகாமில் ரூ.10.96 கோடி இழப்பீடு :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாம்களில் 1,346 வழக்குகளில் ரூ.10 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 286 இழப்பீடாக வழங்க உத்தர விடப்பட்டது.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சிறப்பு முகாம் தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு, மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி தலைமை தாங்கினார். மாவட்ட நீதிபதிகள் லதா, வெற்றிச்செல்வி, அருணாச்சலம் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான அனிதா ஆனந்த், வழக்கறிஞர்கள் உமாசங்கர், ரவிக்குமார், தரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரூ.2 கோடி இழப்பீடு

வாணியம்பாடி வட்டம் வீராங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (70). முன்னாள் ராணுவவீரரான இவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை 1988-ம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனைகள் வழங்குவதற்காக கையகப்படுத்தப் பட்டது. ஆனால், நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்கப்பட வில்லை என்பதால் வாணியம்பாடி நீதிமன்றத்தில் நடராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நடைபெற்று வந்த காலகட்டத்தில் நடராஜன் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வழக்கை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கில் ரூ.1 கோடியே 98 லட்சத்து 96 ஆயிரத்து 893 இழப்பீடுக்கான காசோலை இறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவவர்களின் குடும்பத் தினர் வசம் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வசுந்தரி வழங்கினார்.

அதேபோல், வேலூர் துத்திக்காடு பகுதியைச் சேர்ந்த லாரி கிளீனர் சுதாகர் (26) என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரு காலை இழந்தார். இதையடுத்து ரூ.20 லட்சம் இழப்பீடுகேட்டு வேலூர் நீதிமன்றத்தில் சுதாகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் காணப்பட்டு ரூ.17 லட்சம்இழப்பீடு வழங்க உத்தரவிடப் பட்டது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் 11 நீதிமன்றங்களில் நேற்று நடை பெற்ற மக்கள் நீதிமன்ற சிறப்பு முகாமில் மொத்தம் 3 ஆயிரத்து 639 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 1,346 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.10 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 286 இழப்பீடாக வழங்க உத்தர விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x