Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM

எட்டு மாதங்களாக ஊதியமில்லை - சுண்ணாம்பாறு படகு குழாமில் வளர்ச்சி பணிகளை செய்யுங்கள் : தமிழிசையிடம் ஊழியர்கள் மனு அளித்தனர்

புதுச்சேரி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை நேற்று முன்தினம் சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு வந்த ஆளுநர் தமிழிசையிடம், சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்கள் சங்க கூட்டு போராட்டக்குழு சார்பில் ஒருங் கிணைப்பாளர் விஜயராகவன் மற்றும் ஊழியர்கள் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

30 ஆண்டுக்கும் மேலாக சுண்ணாம்பாறு படகு குழாம் முதல்நிலை சுற்றுலாத் தலமாக உள்ளது. பேரடைஸ் தீவு என அழைக்கப்படும் படகு குழாமின் வருவாயை கவர ஆட்சியாளர்கள் தனியாருக்கு படகு குழாமை தாரை வார்த்தனர். இதனால் கழகத்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் தலை யிட்டு தனியார் படகு குழாம் பகுதியை சுற்றுலா வளர்ச்சிக்கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும். படகு குழாம் அருகே காலியாக உள்ள நிலங்களை கையகப்படுத்தி பொழுதுபோக்கு நீர் விளையாட்டு பூங்காக் கள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 2 ஆண்டுகளாக நிர்வாக சீர்கேடால் நிறுத்தப்பட்டுள்ள பதவி உயர்வு, ஊதிய உயர்வு பறிப்பு, 7-வது சம்பள கமிஷன் பரிந்துரை ரத்து போன்ற குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

கரோனா காலத்தில் படகு குழாம் வருவாய் இழப்பை சந்தித்தது. இதனால் 8 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. கல்விக் கட்டண நிலுவை, வீட்டு வாடகை, மருத்துவ செலவுகள் என அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் ஊழியர்கள் குடும்பங்கள் துயரமடைந் துள்ளனர். தாயுள்ளத்தோடு ஊழியர்களின் குடும்பத்தை கருத்தில் கொண்டு 8 மாத ஊதியத்தை வழங்கவும், தேவையான வளர்ச்சிப் பணிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட் டிருந்தனர். அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய முடிவெடுப்பதாக ஆளுநர் தமிழிசை பதிலளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x