Published : 09 Apr 2021 03:12 am

Updated : 09 Apr 2021 03:12 am

 

Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

வெளிநாட்டு ஏற்றுமதியை முற்றிலுமாக தவிர்த்து - 18 வயது முதல் தடுப்பூசி போடவேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை

வெளிநாட்டு ஏற்றுமதியை முற்றிலுமாக தவிர்த்து, இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:


இந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த 2020 ஏப்ரல் 18-ம் தேதி 2,013 ஆக இருந்தது. மத்திய பாஜக அரசின் அலட்சியத்தால் ஓராண்டில் பாதிப்பு அதிகரித்து, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி கரோனா பாதிப்பு 1.15 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 630 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து 3-வது இடத்தில் இந்தியா உள்ளது.

அதேபோல, தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஒரே நாளில் 4 ஆயிரமாகவும், சென்னையில் 1,500 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் மக்களிடம் மீண்டும் அச்சம், பீதி ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரம் மீண்டும் படுபாதாளத்துக்கு தள்ளப்படுமோ என்ற கவலையில் மக்கள் ஆழ்ந்துள்ளனர். பொருளாதார பாதிப்புகளைவிட, கரோனாவால் உயிருக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற பீதியிலும் உறைந்திருக்கின்றனர்.

எனவே, 18 வயதுக்கு மேற்பட்டஅனைவருக்கும் உடனே கரோனா தடுப்பூசி போட வேண்டும். ஆனால்,அவசியமானவர்களுக்கு மட்டுமே போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்தியாவில் சராசரியாக 1 லட்சம் பேரில் 6,310 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், உலக அளவில் தடுப்பூசி போட்டவர்கள் விகிதம் சராசரியாக 1 லட்சம்பேருக்கு 8,900 ஆக உள்ளது.

எனவே, போர்க்கால அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

மத்திய அரசு இதுவரை 6 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஏற்க முடியாது. எனவே, வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x