Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

மதுரையில் சுட்டெரிக்கும் வெயில் : பகலில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய சாலைகள்

தமிழகத்தில் கரோனா தொற்று 2-வது அலை பரவிவரும் சூழலில் வெயிலின் தாக்கமும் கடுமையாக அதிகரித்து வருவதால் மதுரை நகர் சாலைகளில் பகலில் ஆட்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இது கரோனா ஊரடங்கு காலத்தை நினைவுபடுத்துவது போல உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச்சில் கோடை தொடங்கியது முதல் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல மாதங்களாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். தற்போது படிப்படியாக நிலைமை மேம்பட்டு வரும் சூழலில் கரோனா 2-வது அலை பரவத் தொடங்கி உள்ளதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பங்குனி வெயிலின் தாக்கமும் இயல்பைவிட அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் முடிந்து வாக்குப்பதிவும் நிறைவடைந்துவிட்டது.

இந்நிலையில், சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பகலில் சாலையில் ஆட்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது.

பகலில் அனல் காற்று வீசுவதால் முதியவர்கள், சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தயங்கும் நிலை உள்ளது.

அவசியம் இல்லாத சூழலில் கடுமையான வெயிலில் முகக் கவசம் அணிந்து வெயிலில் நடமாடினால் மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் தேவையின்றி வெயிலில் நடமாட வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நகரில் குளிர்பானக் கடைகள் அதிகரித்து விட்டன.

தெப்பக்குளம், குருவிக்காரன் சாலை, சிம்மக்கல், அழகர்கோவில் சாலை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பனை நுங்கு, தர்பூசணி வியாபாரம் சூடு பிடித்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் அளவு சில நாட்களாக 107 டிகிரியைத் தாண்டி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x