Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில்3 பேர் படுகாயம்; ஒருவர் கைது : மீனவ கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

நாகப்பட்டினம்

நாகையில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தப்பட்டு 3 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மோதலைத் தவிர்க்க மீனவ கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாகை ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்த மீனவர்களில் ஒரு பகுதியினருக்கு, சுனாமி பேரழிவுக்குப் பிறகு மகாலட்சுமி நகர், சவேரியார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சுனாமி நிரந்தர வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, மகாலட்சுமி நகர் மீனவர்களுக்கும், ஆரியநாட்டுத் தெரு மீனவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில், ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்த தர்மபாலன் என்பவரை மீனவர் பஞ்சாயத்து தலைமை பொறுப்பிலிருந்து மாற்ற, மகாலட்சுமி நகரைச் சேர்ந்த மாரியப்பன்(29), ராஜேந்திரன், நகுலன் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாரியப்பன் நேற்று முன்தினம் சவேரியார் கோயில் தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தர்மபாலன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆனந்தன், கதிர், நவீன், உதயா, அரவிந்த், குலோத்துங்கன், அருண்பாண்டி, பிரகதீஷ், அருள், சவேரியார் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெனிபர்(35) ஆகிய 11 பேர் வழிமறித்து, மாரியப்பனை உருட்டுக் கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்க வந்த ராஜேந்திரன், நகுலன் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன், ராஜேந்திரன், நகுலன் ஆகியோர், நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஜெனிபரை நேற்று கைது செய்தனர். மேலும், 10 பேரை தேடி வருகின்றனர்.

இந்த தகராறைத் தொடர்ந்து, ஆரியநாட்டுத் தெரு, மகாலட்சுமி நகர், சவேரியார் கோயில் தெரு பகுதிகளில் மீனவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காக, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x