Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

கடன் மீதான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை : ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் அறிவிப்பு

ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. இது தொடர்பான முடிவு நேற்று நடைபெற்ற நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்தாவது முறையாக வட்டி விகிதத்தில் எவ்வித மாறுதலையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 10.5 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.

6 பேரடங்கிய நிதிக் கொள்கை கண்காணிப்புக் குழுவின் (எம்பிசி) கூட்டம் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்ததாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் ரெபோ விகிதம் தொடர்ந்து 4 சதவீதமாக இருக்கலாம் என்றும் ரிவர்ஸ் ரெபோ விகிதம் 3.35 சதவீதமாகத் தொடரலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக ஆர்பிஐ குறிப்பிட்ட போதிலும், அது பொருளாதார வளர்ச்சி விகிதத்தை பெருமளவு பாதிக்காது என்று கருதுகிறது. தற்போது படிப்படியாக முன்னேற்றம் கண்டு வரும் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கும் என நம்புவதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.

இதனால் வீட்டுக் கடன், வாகனக்கடன், தனி நபர் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதங்கள் எவ்வித மாறுதலும் இன்றி முந்தையநிலையிலேயே தொடரும்.

ரெபோ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதமாகும். இது தொடர்ந்து 4 சதவீதஅளவிலேயே நீடிக்கும். அதேபோல வங்கிகளிடமிருந்து ரிசர்வ்வங்கி பெறும் கடனுக்கான வட்டியானது ரிவர்ஸ் ரெபோ எனப்படுகிறது. இதுவும் மாற்றமின்றி 3.35 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பணவீக்கம் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 5.2 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் 5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சில்லரை பணவீக்கத்தை 4 சதவீத அளவில் பராமரிக்குமாறு மத்திய அரசு ரிசர்வ் வங்கியை கடந்த மாதம் அறிவுறுத்தியுள்ளது. இதில் 2 சதவீதம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ 2026 வரை பராமரிக்குமாறு குறிப்பிட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்த காலத்தில் சில்லரை பணவீக்கம் 5.03 சதவீதமாக அதிகரித்துள்ளது. எரிபொருள் விலைகடுமையாக உயர்ந்ததே இதற்குக்காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை ஆர்பிஐ எடுத்து வருவதாக சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x