Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

தடுப்பூசியில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் - ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு கரோனா :

நாடு முழுவதும் ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவில் பதிவான அதிகபட்ச தினசரி தொற்றாகும். எனினும், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவில் அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் முதல் அலையின் போது மிக அதிகபட்சமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி 97,860 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மத்தியில் இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தொடங்கி யது. இதன்பின் கடந்த 5-ம் தேதி 1.03 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதன்பின் தொடர்ந்து நாள்தோறும் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி வருகிறது.

மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் ஒரே நாளில் 1,15,736 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் பதிவான அதிகபட்ச தினசரி தொற்றாகும். கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8.43 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 630 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா, குஜராத் உட்பட 5 மாநிலங்களில் உள்ளனர் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

மகாராஷ்டிரா முதலிடம்

மகாராஷ்டிராவில் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 55,469 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் 9,921 பேர், கர்நாடகாவில் 6,150 பேர், உத்தர பிரதேசத்தில் 5,895 பேர், டெல்லியில் 5,100 பேர், மத்திய பிரதேசத்தில் 3,722 பேர், தமிழகத்தில் 3,645 பேர், கேரளாவில் 3,502 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த 8 மாநிலங்களில் மட்டும் 81 சதவீத தினசரி தொற்று பதிவாகி உள்ளது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய அறிக்கையின்படி ஒரே நாளில் 12 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 25.14 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரத் துறையின் நேற்று முன்தின புள்ளிவிவரத்தின்படி ஒரே நாளில் 43 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்றைய புள்ளிவிவரத்தின்படி ஒரே நாளில் 33.37 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 8.7 கோடி கரோனா தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு போடப்பட்டிருக்கிறது.

சர்வதேச புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக 30.93 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கரோனா தடுப்பூசி போடுவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா 2-வது இடம்

இந்தியாவுக்கு அடுத்து 2-வது இடத்தில் அமெரிக்கா உள்ளது. அந்த நாட்டில் நாள்தோறும் 29.98 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பிரேசிலில் 6.46 லட்சம் பேர், பிரிட்டனில் 3.71 லட்சம் பேர், பிரான்ஸில் 3.12 லட்சம் பேர், துருக்கியில் 2.83 லட்சம் பேர், ஜெர்மனியில் 2.72 லட்சம் பேர், இத்தாலியில் 2.31 லட்சம் பேருக்கு நாள்தோறும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x