Published : 08 Apr 2021 03:12 am

Updated : 08 Apr 2021 03:12 am

 

Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

உணவு, தங்குவதற்கு இடம் கொடுத்து - தேர்தல் பணியாளர்களை உபசரித்த மலைவாழ் மக்கள் :

உடுமலை

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள வனப்பகுதியில் தேர்தல் பணிக்காக சென்றவர்களை உபசரித்து மக்கள் அனுப்பியதால், வாக்குச்சாவடி அலுவலர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்டு கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி, கருமுட்டி, குழிபட்டி, மாவடப்பு, குருமலை, மேல்குருமலை உட்பட 18 மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் அனைத்தும் ஆனைமலை புலிகள் காப்பக வனப் பகுதிக்குள் உள்ளன. அங்கு 1,600 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக தளிஞ்சி, கோடந்தூர், மாவடப்பு ஆகிய 3 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தளிஞ்சி மற்றும் கோடந்தூர் வாக்குச்சாவடி மண்டல அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கடந்த 5-ம் தேதி மாலை வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களுடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்றனர். அரசுப் பள்ளியில் தங்கிய அவர்களை உபசரித்து மலைவாழ் மக்கள் உணவு வழங்கினர்.


இதேபோல உடுமலையில் இருந்து 100 கி.மீ. தொலைவில்உள்ள மாவடப்பு வாக்குச்சாவடிக்கு மண்டல அலுவலர் பி.ராமராஜ் தலைமையிலான குழுவினர் சென்றனர். தேர்தல் பணி முடிந்து திரும்பும் வரை,பணியாளர்களுக்கு உணவும், தங்குவதற்கு இடமும் வழங்கிஅப்பகுதி மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். மாவடப்பு வாக்குச்சாவடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள கருமுட்டி, குழிப்பட்டி கிராமங்களில் இருந்து 100-க்கும்மேற்பட்டோர் வாக்களிக்க சென்றனர்.

இவர்கள் நீண்ட தொலைவில் இருந்து வருவதால் மனமிறங்கிய மாவடப்பு பகுதி மலைவாழ் மக்கள், அவர்களை முதலில் வாக்களித்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி கருமுட்டி, குழிப்பட்டி கிராம மக்கள் வாக்களித்த பின்பே மாவடப்பு மலைவாழ் மக்கள் வாக்களித்தனர். மலைவாழ் மக்களின் உபசரிப்பு மற்றும் அடுத்தவர்களுக்கு உதவும் தன்மையைக் கண்டு தேர்தல் பணியாளர்கள் நெகிழ்ந்தனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x