Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

அதிக வாக்குப்பதிவு சதவீதம் பெற்ற - பாலக்கோடு தொகுதியில் அனல் பறக்கும் அரசியல் விவாதங்கள் :

தமிழகத்திலேயே வாக்குப்பதிவு சதவீதத்தில் முதலிடம் பிடித்த பாலக்கோடு தொகுதியில் வெல்லப் போவது யார்? என தொகுதிக்குள் விறுவிறு விவாதங்கள் நடந்து வருகின்றன.

தமிழக சட்டப் பேரவை தொகுதிகள் வரிசையில் 57-வது இடத்தில் இருப்பது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப் பேரவை தொகுதி. 6-ம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளில் அதிக வாக்குப்பதிவு சதவீதத்துடன் முதலிடம் பிடித்திருப்பது இந்த பாலக்கோடு தொகுதி தான். 1 லட்சத்து 19 ஆயிரத்து 828 ஆண், 1 லட்சத்து 16 ஆயிரத்து 997 பெண் மற்றும் 18 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 2 லட்சத்து 36 ஆயிரத்து 843 வாக்காளர்கள் இந்தத் தொகுதியில் உள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 7058 வாக்காளர்கள், நடந்து முடிந்த தேர்தலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். அதாவது 87.37 சதவீதம் வாக்குகள் பதிவாகிஉள்ளன.

இந்த தொகுதியில், அதிமுக சார்பில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் போட்டியிட்டார். திமுக சார்பில் வழக்கறிஞர் பி.கே.முருகன் போட்டியிட்டார். இதுதவிர, மக்கள் நீதிமய்யம் சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளரான வழக்கறிஞர் ராஜசேகர், அமமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயசங்கர், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைச்செல்வி ஆகியோரும் போட்டியிட்டனர். இவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் என தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பாலக்கோடு தொகுதியில் 2001, 2006, 2011, 2016 ஆகிய 4 சட்டப் பேரவை தேர்தல்களிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்றவர் கே.பி.அன்பழகன். 5-வது முறையாக அதே தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு 5983 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டவர் பி.கே.முருகன். அவரே இந்த முறையும் திமுக சார்பில் போட்டியிட்டார்.

பாலக்கோடு தொகுதி அதிமுக-வின் கோட்டை என்று மாவட்ட அதிமுக-வினர் செல்லமாகவும், பெருமையாகவும் கூறுவதை அவ்வப்போது கேட்க முடியும். அந்த அளவு அதிமுக-வுக்கும், கே.பி.அன்பழகனுக்கும் தொகுதிக்குள் நற்பெயர் உள்ளது. தொகுதிக்கு பல்வேறு திட்டங்களைசெய்து கொடுத்துள்ளார் எனவும் கட்சியினர் கூறுவர். இவை அனைத்தும் சமீபத்தியதேர்தல் பிரச் சாரத்தின் போதும் தொகுதிக்குள் ஒலித்தது.

அதேநேரம், 4 முறை தொடர்ச்சியாக தொகுதி எம் எல் ஏ-வாகவும், 2 முறை அமைச்சராகவும் இருந்த கே.பி.அன்பழகன் தொகுதி மக்களுக்கு பெரிதாக என்ன செய்து விட்டார்? என்ற கேள்வியை முன்வைத்தே வாக்காளர்களை சந்தித்தனர் திமுகவினர்.

இரு பெரும் கட்சிகளின் வேட்பாளர்களும் மேற்கொண்ட இந்த பிரச்சார வடிவங்களில் எது அதிகப்படியான வாக்காளர்களின் இதயங்களை தொட்டது என்பதை மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி விடும்.ஆனால், தேர்தலுக்கு முன்பை விட தற்போது தான் பாலக்கோடு தொகுதிக்குள் அரசியல் விவாதங்கள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. தமிழகத்திலேயே முதலிடம் பெறும் வகையில் அதிகப்படியான வாக்குப்பதிவு பாலக்கோட்டில் நடந்திருப்பதால் இவ்வாறு விவாதங்கள் நடந்து வருகின்றன.

ஒவ்வொரு கட்சி தரப்பும் தங்களுக்கு சாதகமான அம்சங்கள் சிலவற்றை சுட்டிக்காட்டி, ‘வெற்றி எங்களுக்கே’ என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்த விவாதக் குரல்கள் ஓய்வெடுக்கச் செல்ல, சுமார் ஒரு மாதம் பாலக்கோடு தொகுதிவாசிகள் காத்திருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x