Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

300 வீரர்கள், 120 கேமராக்களுடன் - 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் :

தருமபுரி மாவட்ட வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் என மொத்தம் 5 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு 12 லட்சத்து 67 ஆயிரத்து 798 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 870 இடங்களில் 1817 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த 6-ம் தேதி தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தருமபுரி அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

துணை ராணுவப் படை, காவல்துறையினர் 300 பேர் அடங்கிய குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இந்த 3 அடுக்கு தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் அடுக்கில் துணை ராணுவப் படை வீரர்களும், இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை வீரர்களும், மூன்றாம் அடுக்கில் தருமபுரி ஆயுதப்படை காவலர்களும் இடம்பெற்றுள்ளனர். 3 அடுக்கிலும் சேர்த்து ஒவ்வொரு அணிக்கும் 70 போலீஸார், 20 துணை ராணுவப் படையினர் என 90 பேர் இடம்பெற்றிருப்பர்.

ஒவ்வொரு அணி பணியில் இருக்கும்போதும் 1 ஏடிஎஸ்பி, 1 டிஎஸ்பி, 2 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு இந்த மேற்பார்வை பணியில் ஈடுபடும்.

அதேபோல, வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்கு வெளியில் முக்கிய பகுதிகள், முக்கிய சாலை சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் போலீஸார் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள், பிரதான கட்டிட நுழைவு வாயில்கள், வளாக நுழைவு வாயில் உட்பட 120 இடங்களில் வருவாய் துறை மூலம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதிகாரிகள் முன்னிலையில் சீல்

தருமபுரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று இரவு 10 மணி முதல் சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரத் தொடங்கின. இரவு முழுக்க இயந்திரங்கள் வந்து கொண்டிருந்தன.

இயந்திரங்கள் முழுமையாக வந்து சேர்ந்த பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான கார்த்திகா மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் தினேஷ் சிங், கமால் ஜஹான் லாக்ரா, பங்கஜ் ஆகியோர் முன்னிலையில் உரிய அலுவலர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டன. அதன்பின்னர், ஒவ்வொரு தொகுதிக்குமான ‘ஸ்ட்ராங் ரூம்’ என்று அழைக்கப்படும் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டப்பட்டன. பிறகு அந்த அறைகளுக்கு அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x