Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

புதுவை, காரைக்காலில் 6 மையங்களில் - 3 அடுக்கு பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் : வெப் கேமரா மூலம் கண்காணிப்பு

புதுச்சேரி முழுக்க 6 மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இம்மையங்கள் உள்ள பகுதி முழுக்க தடையில்லா மின்சாரம் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரியில் 23 தொகுதிகளும், காரைக்காலில் 5 தொகுதிகளிலும், மாஹே, ஏனாமில் தலா ஒரு தொகுதிகளும் என 30 தொகுதிகள் உள்ளன.

இந்த 30 தொகுதிகளில் 1,677 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,558 கட்டுப்பாட்டு கருவிகள், 1.558 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன

வாக்குப்பதிவு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. 30 தொகுதிகளில் அமைக்கப்பட்ட 1,558 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

புதுச்சேரி, காரைக்கால் உட்பட 4 பிராந்தியங்களில் வாக்குகளை எண்ண 6 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனாவையொட்டி ஒவ்வொரு அறையிலும் 7 எண்ணும் மேஜைகள் அமைக்கப்படுகின்றன.

புதுச்சேரி லாஸ்பேட் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர் ஆகிய 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு எண்ணப்படும்.

லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மண்ணாடிபட்டு, திருபுவனை, ஊசுடு, மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி ஆகிய 9 தொகுதிகளுக்கு எண்ணப்படும்.

தாகூர் கலைக் கல்லூரியில் காமராஜ் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன் ஆகிய 5 தொகுதிகளுக்கு எண்ணப்படும்.

காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி டிஆர்.பட்டினம், நெடுங்காடு, திருநள்ளாறு ஆகிய 5 தொகுதிகளுக்கு எண்ணப்படும்.

மாஹே ஜவர்ஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாஹே தொகுதி வாக்கும், ஏனாம் வாக்குகள் அங்குள்ள சிவில் மையத்திலும் எண்ணப்படும்.

கரோனாவையொட்டி ஒவ்வொரு அறையிலும் 7 எண்ணும் மேஜைகள் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு உள்ளூர் போலீஸார், ஐஆர்பிஎன் போலீஸார், துணை ராணுவத்தினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் தரவும் மின்துறைக்கு தேர்தல் துறை அறிவுறுத்தி, போதிய முன் ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x