Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

நெல்லையில் 24 மணிநேரமும் கண்காணிப்பு - வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு :

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை தொகுதிக்கான வாக்கு பெட்டிகளை தேர்தல் பார்வையாளர் சுப்ரதா குப்தா பார்வையிட்டார். படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பதிவான வாக்குகளுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிக்கு நேற்று நண்பகல் வரையில் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தொகுதிவாரியாக தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

கண்காணிப்பு கேமராக்கள்

செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. எங்கும் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை. இதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து தரப்பினருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு 24 மணிநேரமும் இருக்கும். முதல் அடுக்கில் மத்திய துணை ராணுவப்படையினரும், 2 மற்றும் 3-வது அடுக்கில் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும், அதற்கான கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட பகுதி

இதனிடையே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள 2 கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கல்லூரி வளாகம் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கல்லூரி முழுக்க 156 கேமராக்கள்

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் கூறியதாவது: திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில்

3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பில் இருப்பார்கள். 2 மற்றும் 3-வது அடுக்கில் போலீஸார் இருப்பார்கள். மொத்தம் ஒரு ஷிப்டுக்கு 150 போலீஸார் என்று 3 ஷிப்டுக்கு 450 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வளாகத்தில் மொத்தம் 156 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் பிரதான கட்டிடத்தின் முகப்பு பகுதியிலுள்ள கட்டுப்பாட்டு அறையிலுள்ள அகன்ற டிவி திரைகளில் கண்காணிக்கப்படும். வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் வந்து கண்காணிக்கவும் தனியாக இடவசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஷிப்டுக்கு ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் வீதம் 3 முகவர்கள் கண்காணிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நேரத்தில் ஒரு முகவர் மட்டுமே உள்ளே இருக்க முடியும். வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும். 2 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும் 24 மணிநேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x