Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருட்டறைகளில் வைத்து சீல் : தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைகளில் வைத்து நேற்று சீல் வைக்கப்பட்டன.

இயந்திரங்கள் வந்து சேர்ந்தன

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேற்று முன்தினம் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை இடைவெளியின்றி நடைபெற்றது. 6 தொகுதிகளில் உள்ள 2,097 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவுக்கு பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் கருவிகள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்டன.

பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவை, தூத்துக்குடி அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு 10 மணி தொடங்கி, நேற்று காலை 9 மணி வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தன. கடைசியாக விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து சேர்ந்தன.

அறைகளுக்கு சீல் வைப்பு

தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைத்து அனுப்பப்பட்டிருந்த ஆவணங்களை சரிபார்த்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் கருவிகளை சட்டப்பேரவை தொகுதி வாரியாக 6 தனித்தனி பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டினர்.

இவற்றை, மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தேர்தல் பொது பார்வையாளர்கள் ஜுஜவரப்பு பாலாஜி, அஸ்வானி குமார் சவுதாரி, அனில் குமார், சுஷில் குமார், சவின் பன்சால் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி,தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளை, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூடி சீல் வைத்தனர்.

அந்த அறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இனி,மே 2-ம் தேதி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இந்த அறைகள் திறக்கப்பட்டு, இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்காக வெளியே எடுக்கப்படும்.

3 அடுக்கு பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்தியபாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 4 பேர் என மூன்றுஷிப்டுகளில் 6 அறைகளுக்கும் மொத்தம்72 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 50 பேரும், கல்லூரியைச் சுற்றிலும்ஒரு டிஎஸ்பி தலைமையில் 150 உள்ளூர்போலீஸாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

கேமரா கண்காணிப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 6 அறைகளுக்கு வெளியேயும், வாக்கு எண்ணும் மைய வரவேற்பு பகுதியிலும், பிரதான நுழைவு வாயில் பகுதியிலும் என, பொறியியல் கல்லூரி வளாகம் முழுவதும் மொத்தம் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இவை 24 மணி நேரமும் செயல்படும்வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் முகவர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை வரை இந்த பாதுகாப்புகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்த னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x