Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது ஏன்? :

வாக்களித்த பின் தனது கார் டிரைவரின் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய விஜய்.

சென்னை

நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதை பெட்ரோல், டீசல் விலை உயர்வுடன் தொடர்புபடுத்தி வலைதளங்களில் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் வைரலாக்க, அப்படி எந்த காரணமும் இல்லை என விஜய் தரப்பு மறுத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்களில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பலரும் நேற்று காலை வரிசையில் நின்று வாக்களித்தனர்.

நடிகர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள தன் வீட்டில் இருந்து சைக்கிளில் வந்து வாக்கை பதிவு செய்தார். இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் நேற்று காலைமுதலே சமூக வலைதளங்களில் வைரலானது.

காரை தவிர்த்து, விஜய் எளிமையாக சைக்கிளில் வந்து வாக்களித்ததாக அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாட, அரசியல் கட்சியினர் மற்றும் கட்சி ஆதரவாளர்களோ பெட்ரோல், டீசல் விலை உயர்வைத்தான் விஜய் சூசகமாக குறிப்பிடுகிறார் என்று விமர்சித்து, இந்த புகைப்படங்களை பகிர்ந்தனர். இதுதொடர்பாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பாஜக வேட்பாளர்குஷ்பு உள்ளிட்ட திரைத் துறையினரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், விஜய் தரப்பில் இருந்து ஒரு ஆடியோ வெளியிடப்பட்டது. அதில், ‘‘விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்ததற்குஒரே ஒரு காரணம்தான். வாக்குப்பதிவு மையம் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தெருவில் உள்ளது. அது சின்ன தெரு என்பதால் காரில்சென்று வருவது இடைஞ்சலாக, நெருக்கடியாக இருக்கும். இதனால்தான் சைக்கிளில் வந்தார். இதைத்தவிர வேறு எந்த காரணமும்கிடையாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகம்சுளிக்க வைத்த ரசிகர்கள்

திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு, மனைவி ஷாலினியுடன் அஜித், காலை6.30 மணிக்கே வந்து வரிசையில் நின்றார்.நேரம் ஆக ஆக அவரை சூழ்ந்த ரசிகர்கள்,செல்ஃபி எடுத்தபடி இருந்தனர். ஒரு கட்டத்தில், ரசிகர் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட அஜித்,ஷாலினி நகரக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.போலீஸார் மிகவும் சிரமப்பட்டு அவர்களை மீட்டு, வாக்குச்சாவடிக்குள் அனுப்பினர். அங்கும் ரசிகர்கள் இடையூறு செய்தபடி, செல்ஃபி எடுக்க முயல, ஒரு கட்டத்தில் கோபமடைந்த அஜித், ஒரு ரசிகரின் செல்போனை பறித்து, எச்சரித்த பிறகு மீண்டும் திருப்பிக் கொடுத்தார்.

இதேபோல, சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து வாக்களிப்பதற்காக சைக்கிளில் விஜய் புறப்பட, வீட்டு வாசலிலேயே தயாராக காத்திருந்த ரசிகர் கூட்டம்,இருசக்கர வாகனங்களில் அவரை தொடர்ந்தது. அவர்களது வேகத்துக்கு ஈடுகொடுத்து, சைக்கிளை வேகமாக மிதித்துச் சென்றார் விஜய். வாக்களித்த பின், தனது கார் டிரைவரின்இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x