Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

திரிணமூல் காங். தலைவர் வீட்டில்இவிஎம், விவிபாட் கருவிகள் : மேற்கு வங்கத்தில் தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்

மேற்கு வங்கத்தில் 3-ம் கட்ட மாக, ஹவுரா, ஹூக்ளி, தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 31 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

முன்னதாக நேற்று அதிகாலையில் ஹவுரா மாவட்டம், உலுபெரியா உத்தர் தொகுதி, துள்சிபெரியா என்ற கிராமத்தில் உள்ளூர் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் வீட்டின் முன்பு தேர்தல் ஆணைய ஸ்டிக்கருடன் கார் ஒன்று நின்றிருந்தது. இதைக் கண்டு அங்கு திரண்ட மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயரதிகாரிகள் அங்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதில், இவிஎம் (மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்), விவிபாட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி) இயந்திரங்களுடன் 17-வது செக்டார் தேர்தல் அதிகாரிகளில் ஒருவரான தபன் சர்க்கார் அந்த வீட்டில் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் தபன் சர்க்கார், “முதல் நாள் இரவு தாமதமாக இப்பகுதிக்கு வந்தேன். வாக்குச் சாவடி மூடப்பட்டிருந்து. பாது காப்பான இடம் வேறு எதுவும் இல்லாததால் உறவினர் வீட்டில் தங்கினேன்” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தபன் சர்க்காரை தேர்தல் ஆணை ம் நேற்றுசஸ்பெண்ட் செய்தது. மேலும் அந்த வீட்டிலிருந்த 4 ஜோடி இயந்திரங்கள் வாக்குப் பதிவில் பயன்படுத்தப்படாது என்று அறி வித்ததுடன் சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.

இதனிடையே திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் முறைகேடு திட்டத்தின் ஒரு பகுதியே இந்த சம்பவம் என்று பாஜக வேட்பாளர் சிரன் பெரா குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, “வாக்குப் பதிவு நாளில் நடந்துள்ள இந்த சம்பவம் மிகவும் தீவிரமானது. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறும்போது, “இது திரிணமூல் காங்கிரஸின் பழைய வழக்கம். அவ்வளவு எளிதில் இந்த வழக்கத்தை அவர்களால் விட முடியாது. சிறிதுகாலம் எடுக்கும். இப்போது கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார்கள். அவர்கள் இதுவரை என்ன செய்து வந்தனர் என்பதையே இது காட்டுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x