Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

ரஜினி, கமல், விஜய், அஜித் உட்பட - ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்த திரையுலகினர் :

ரஜினி, கமல், விஜய், அஜித் உட்பட திரையுலகினர் பலரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போல, தமிழ் திரையுலகினர் பலரும் காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சிபிராஜ், பிரபு, விக்ரம் பிரபு, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சசிகுமார், விக்ரம், சிம்பு, அருண்விஜய், அருள்நிதி, சந்தானம், யோகிபாபு, சூரி, சினேகா, ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், நிக்கி கல்ராணி, இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், எம்.ராஜா, சேரன் உள்ளிட்ட பலரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களிக்க காலை 7 மணிக்கு வந்தார். வாக்களிக்கும் இயந்திரம் அருகே அவர் சென்றபோது வீடியோ, புகைப்படம் எடுக்க திரண்ட செய்தியாளர்களை பின்னால் போகுமாறு சைகை காட்டினார். அனைவரும் பின்னால் சென்ற பிறகு, வாக்களித்தார்.

தி.நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி மற்றும் குடும்பத்தினர் வாக்களித்தனர். அதே வாக்குச்சாவடியில் சிம்புவும் வாக்களித்தார்.

கோடம்பாக்கத்தில் வாக்களித்த விஜய்சேதுபதி, செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் நன்றாக உள்ளது. எப்போதுமே சாதி, மதத்துக்கு எதிராக வாக்களியுங்கள் என்பேன். மனிதன்தான் இங்கு எல்லாமே’’ என்றார்.

நடிகர் அஜித்குமார், மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் வாக்களித்தார். ஆண்ட்ரியா கீழ்ப்பாக்கம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். விக்ரம் பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நடந்து சென்று வாக்களித்தார். வளசரவாக்கத்தில் சிவகார்த்திகேயன், விருகம்பாக்கத்தில் விமல், தி.நகரில் ஐஸ்வர்யா ராஜேஷ், பெரும்புதூரில் யோகிபாபு வாக்களித்தனர்.

வாக்களிக்காத பிரபலங்கள்

இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, இயக்குநர் மணிரத்னம், வெற்றிமாறன், கவுண்டமணி, வடிவேலு, கே.பாக்யராஜ், விஜயகாந்த், மோகன், கார்த்திக், பார்த்திபன், ராஜ்கிரண், அரவிந்த் சுவாமி, பிரபுதேவா, லாரன்ஸ், விஷால், இயக்குநர் சுந்தர்.சி, சிவா, சமுத்திரக்கனி, ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன், லிங்குசாமி, கோவை சரளா, மீனா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இத்தேர்தலில் வாக்களிக்கவில்லை.

‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்துக்காக தனுஷ், அமெரிக்காவில் இருக்கிறார். மே மாதம்தான் இந்தியா திரும்ப உள்ளார். இதனால் தனுஷ் இத்தேர்தலில் வாக்களிக்கவில்லை. மனைவி ஐஸ்வர்யா தனுஷும் உடன் சென்றுள்ளதால் அவரும் வாக்களிக்கவில்லை. ரஜினியின் மற்றொரு மகளான சவுந்தர்யா ரஜினிகாந்தும் வாக்களிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x