Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

கோவை மாவட்டத்தில் 68.32 சதவீதம் வாக்குப் பதிவு :

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 4,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள், முகவர்கள் காலை 6 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்தனர். வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மையை பரிசோதிக்க மாதிரி வாக்குப்பதிவுகள் நடத்தப்பட்டன. சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இருகூர் தெற்குப் பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் 129-வது எண் வாக்குச்சாவடியில் மின் விளக்குகள் எரியவில்லை. அந்த அறை இருட்டாக காணப்பட்டதால், நண் பகல் வரை வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், சிரமத்துடன் பணியாற்றினர்.

சித்தாப்புதூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு, முகவர்கள் தாமதமாக வந்ததால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அன்னூர் அருகே எல்லப்ப பாளையம் கிராம வாக்குச்சாவடி, சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட கரும்புக்கடையில் உள்ள 286, 287, 288-வது வாக்குச்சாவடிகள், இலாஹிநகரில் உள்ள 281-வது வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதாகின. அவை சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டன.

வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோரை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டிருந்தன. செங்கத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவ டிகளில் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்படாமல் ஓரமாக வைக்கப்பட்டிருந்தன. இதனால் அந்த வாக்குச்சாவடிக்கு வந்த முதியவர்கள் சிரமத்துடன் நடந்து வந்து வாக்களித்தனர். பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கையுறைகள், வாக்களித்த பின்னர் முறையாக சேகரிக்கப்படவில்லை.

காலை முதல் நண்பகல் வரை வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. பிற்பகல் ஒரு மணியில் இருந்து 3 மணி வரை கூட்டம் குறைவாக காணப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு இருந்ததால், பல்வேறு மையங்களில் பிற வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, ஓட்டுப் போட அனுமதிக்கப்பட்டனர். கோவை மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் 9 பேர் வாக்களித்தனர். வாக்குச்சாவடிகளில் போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்கப்பட்டது.

இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், அந்தந்த வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அதற்கான பெட்டியில் போடப்பட்டு முகவர்கள் முன்னிலையில், தேர்தல் பிரிவு அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப் பட்டன. பின்னர் தடாகம் சாலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான அரசினர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x