Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

மூத்த பத்திரிகையாளர் கோசல்ராம் காலமானார் : தெலங்கானா ஆளுநர் தமிழிசை அஞ்சலி; மு.க.ஸ்டாலின் இரங்கல்

மறைந்த பத்திரிகையாளர் கோசல்ராம் உடலுக்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தனது கணவர் சவுந்தரராஜனுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். (உள்படம்) கோசல்ராம்.படம்: எல்.சீனிவாசன்

சென்னை

மூத்த பத்திரிகையாளர் கோசல் ராம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 49. அவரது உடலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள் ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள் ளனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மயிலப்பப்புரம் கிராமத்தில் பிறந்தவர் கோசல்ராம். துடிப்புமிக்க செய்தியாளராக பத்திரிகை பணியை தொடங்கிய கோசல்ராம், தனது உழைப்பு, திறமையால் துணை ஆசிரியர், பொறுப்பாசிரியர், குழும ஆசிரியர், காட்சி ஊடகத்தின் தலைமை செய்தி பொறுப்பாளர் என்று படிப்படியாக உயர்ந்தவர். விகடன் பேப்பர், தினகரன், குமுதம் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அவர், இறுதியாக நியூஸ் 7 தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தார். சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்துவந்தார்.

சமீபகாலமாக இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவ மனையில் நேற்று முன்தினம் இரவு காலமானார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை, தனது கணவர் சவுந்தரராஜனுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியர்கள், பத்திரிகை யாளர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

தலைவர்கள் இரங்கல்

திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘தமிழின் மூத்த பத்திரிகை யாளர்களில் முக்கியமானவரான கோசல்ராம் உடல்நலக் குறைவால் காலமானதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இதயநோயால் அவதிப்பட்டுவந்த அவர்,49 வயதில் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘நண்பரும், பத்திரிகையாளருமான கோசல்ராம் மறைவை அறிந்து பெரிதும் வருந்தினேன். அவரது இழப்பு பத்திரிகைத் துறைக்கு பேரிழப் பாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள், பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளின் நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x