Published : 07 Apr 2021 03:17 am

Updated : 07 Apr 2021 03:17 am

 

Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

‘பெரியாரிய அறிஞர்’ வே.ஆனைமுத்து காலமானார் : ஓபிசி இடஒதுக்கீடு கிடைக்க காரணமானவர் என தலைவர்கள் புகழாரம்

வே.ஆனைமுத்து

சென்னை

பெரியாரிய அறிஞரும், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவருமான வே.ஆனைமுத்து புதுச்சேரியில் நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 97. அவரது உடல் நேற்று மாலை 6 மணிக்கு தாம்பரம் இரும்புலியூரில் அவரது மூத்த மகன் பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 78 ஆண்டுகளாக பெரியாரின் சிந்தனைகளைப் பரப்பி வந்த ஆனைமுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்குமருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். அதன்பிறகு புதுச்சேரியில் உள்ள அவரது மகன் வெற்றிஇல்லத்தில் வசித்து வந்தார். வயோதிகத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு 4 நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில்உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை 11.30 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.


பெரம்பலூர் அருகே முருக்கன்குடி கிராமத்தில் 21.6.1925-ல் வேம்பாயி - பச்சையம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் ஆனைமுத்து. 19-வதுவயதில் பெரியாரின் சொற்பொழிவைக் கேட்டு அவரது கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அன்று முதல் பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதே அவரதுவாழ்க்கையானது. ஆனைமுத்துவின் மனைவி சுசீலா அம்மையார் 3 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இந்த தம்பதியருக்கு பன்னீர்செல்வம், வெற்றி, வீரமணி, அருள்மொழி ஆகிய 4 மகன்களும், தமிழ்ச்செல்வி, அருள்செல்வி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப 1950-ம் ஆண்டில் ‘குறள்மலர்’ என்ற பத்திரிகையை ஆனைமுத்து தொடங்கினார். ‘சிந்தனையாளன்’ இதழையும் நடத்தி வந்தார். பெரியாருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஆனைமுத்து, பெரியார் இருந்தபோதே அவரது பேச்சுகள், எழுத்துகளைத் தொகுத்து நூலாக்கும் பணியைத் தொடங்கினார்.

‘சிந்தனையாளர்களுக்கு சீரிய விருந்து’, ‘தீண்டாமை நால்வருணம் ஒழிப்போம்!’, ‘பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?’, ‘விகிதாச்சார இடஒதுக்கீடு செய்!’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ‘பெரியார் - ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்று பெரியாரின் சொற்பொழிவுகளையும், எழுத்துகளையும் தொகுத்து வெளியிட்டார்.

1976-ல் 'பெரியார் சம உரிமைக் கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். 1988-ல் அந்த அமைப்பை'மார்க்சிய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி' என்று மாற்றி அதன் மூலம் பெரியாரிய கருத்துகளை பரப்ப நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்தார். தமிழகத்தைப் போல வட மாநிலங்களிலும்,அகில இந்திய அளவிலும் பிற்படுத்தப்பட்டோ ருக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், பாபு ஜெகஜீவன் ராம், ஜெயில்சிங், வி.பி.சிங், கன்சிராம் என்று பல்வேறு தலைவர்களை சந்தித்து வலியுறுத்தினார்.

பொதுமக்கள் அஞ்சலி

மறைந்த ஆனைமுத்துவின் உடல் நேற்று மாலை 6 மணிக்கு தாம்பரம்இரும்புலியூரில் உள்ள அவரது மூத்தமகன் பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்குகொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெரியார்சிந்தனையாளர்கள், அரசியல் கட்சிபிரமுகர்கள், பொதுமக்கள் எனபல்வேறு தரப்பினரும் அவரதுஉடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் இன்று மாலை 4 மணிக்குபோரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குதானமாக வழங்கப்படுகிறது. ஆனைமுத்துவின் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: பெரியார் கொள்கையை நெஞ்சில் ஏந்தி,பகுத்தறிவு - சமூக நீதிப்பாதையில் பயணித்து, முதுமையிலும் பொதுத்தொண்டாற்றிய மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர் வே.ஆனைமுத்துவின் மறைவு திராவிட இயக்கத்துக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் பேரிழப்பாகும். பெரியாரின்சிந்தனைகளைத் தொகுத்த அய்யாவின் பெரும் பணியும், ‘சிந்தனையாளன்’ என்ற சீரிய இதழ் வாயிலாக அவர் வழங்கியகருத்துகளும் என்றும் நிலைத்திருக்கும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆனைமுத்து, பெரியார் சிந்தனைகள் 3 தொகுதிகள் வெளிவர காரணமாக இருந்தவர். திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைக்குச் சென்றவர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: வாழ்நாள் முழுவதும் பெரியாரின் பெருந்தொண்டனாக உழைத்த பெருமைக்கு உரியவர் வே.ஆனைமுத்து. 1957-ம் ஆண்டு சாதி ஒழிப்புக்காக பெரியார் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று 18 மாதம் சிறைத்தண்டனை பெற்றதியாக வேங்கை. வடமாநிலங்களில் சமூகநீதி கருத்துகளை பிரச்சாரம் செய்து மண்டல் குழு பரிந்துரைகள் நிறைவேற அவர் ஆற்றிய பணி மகத்தானது. திராவிட இயக்க வரலாற்றில் அவரின் தனித்த புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: பெரியாரின் இயக்கத்தோடு இரண்டறக் கலந்தவர் ஆனைமுத்து. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய பி.பி.மண்டலுக்கு உறுதுணையாக இருந்தார். அவர் அளித்த தகவல்கள்தான் மண்டல் அறிக்கை வெளிவர முக்கிய காரணமாக அமைந்தன.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீடு, சமூகநீதிக்காக ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர். மத்திய அரசு பணியில் ஒபிசி இடஒதுக்கீட்டுக்காக போராடியவர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழ்த்தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் ஆனைமுத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x