Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அமைதியான வாக்குப்பதிவு :

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கென 1,454 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 181 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, ஒரு வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அவற்றில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

9,762 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காவல்துறை, ஊர்க்காவல் படை மற்றும் துணை ராணுவப் படையினர் 2,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வடுவூர் தென்பாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படாத காரணத்தால் 90 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

76.57 சதவீதம் வாக்குப்பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 76.57 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. இதில், மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 74.36 சதவீதம், நன்னிலம் தொகுதியில் 82 சதவீதம், திருவாரூர் தொகுதியில் 73.2 சதவீதம், திருத்துறைப்பூண்டி தொகுதியில் 76.74 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி குடவாசல் வட்டம் அன்னியூரில் வாக்குச்சாவடி அருகே அதிமுக பிரமுகர் மகேந்திரன் என்பவரை திமுகவைச் சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக உருட்டுக் கட்டையால் தாக்கினர்.

இதில், படுகாயமடைந்த மகேந்திரன் திருவிழிமிழலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மன்னார்குடி கீழப்பாலம், மேலவீதி, வஉசி சாலை பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களிடம் வாக்குசேகரிப்பதில் திமுக, அதிமுகவினர் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பு நிலவியது. இதை தவிர, மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாகை, மயிலாடுதுறை...

நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாவட்ட தேர்தல் அலுவலரும், நாகை மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி.நாயர் நேற்று வாக்களித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்குட்பட்ட 1,861 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. வாக்காளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களித்தனர். நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் தேர்தல் பணியில் 12 ஆயிரம் அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து இடங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x