Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - 9 சட்டப்பேரவை தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு : வரும் மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன

காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள டான்போஸ்கோ மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன். அடுத்த படங்கள்: வேலூர் எழில் நகரில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம் வாக்களித்தார். வேலூர் அண்ணா சாலையில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்த வேலூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேயன். கடைசிப்படம்: காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்த வேலூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு.

வேலூர் / ராணிப்பேட்டை

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் நேற்று விறு விறுப்பான வாக்குகள் பதிவானது. பெரிய அளவில் சர்ச்சைகள் இல்லாமல் வாக்குப்பதிவு நிறை வடைந்தது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில், மொத்தம் 12 லட்சத்து 71 ஆயிரத்து 132 பேர் வாக்களிக்காளர்கள். இவர்களுக்காக, 1,783 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 70 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியி லும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவை தொடங்க வேண்டும் என கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அதற்கு ஏற்ப காலை 6.30 மணிக்குள் மாதிரி வாக்குப் பதிவுகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

5 சட்டப்பேரவைத் தொகுதி களில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி காட்பாடியில் 10.2 சதவீதமும், வேலூரில் 10.8 சதவீதமும், அணைக்கட்டில் 10.3 சதவீதமும், கே.வி.குப்பத்தில் 8.21 சதவீதமும், குடியாத்தத்தில் 8.5 சதவீதமும் இருந்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி காட்பாடி யில் 67.5 சதவீதமாகவும், வேலூரில் 57.6, அணைக்கட்டில் 71, கே.வி.குப்பத்தில் 67.38, குடியாத்தத்தில் 62.15 சதவீதமாக இருந்தன.

30 இயந்திரங்கள் மாற்றம்

வேலூர் மாவட்டத்தில் 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள், 22 விவிபாட் இயந்திரங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று புதிதாக மாற்றப்பட்டது. இதனால், சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் 7 கம்பெனி துணை ராணுவப் படையினர், 470 சிறப்பு காவல் படையினர், 733 காவலர்கள் மற்றும் காவலர்கள் அல்லாதவர்கள் 1,050 பேர் என மொத்தம் 2,749 பேர் ஈடுபட்டனர்.

விறுவிறு வாக்குப்பதிவு

கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனால், நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் தங்கள் வாக்குகளை முன்கூட்டியே பதிவு செய்ய அதிகளவில் திரண் டனர். ஆண்கள், பெண்கள் என நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்ததால் வாக்குப்பதிவு சதவீதம் கிடுகிடுவென அதிகரித்தது.

கரோனா தடுப்புப் பணி

ஒவ்வொரு வாக்குச்சாவடி யிலும் வாக்காளர்களின் வெப்ப நிலையை பரிசோதித்த பிறகே வாக்களிக்க உள்ளே அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், ஒவ்வொரு வாக் காளர்களுக்கும் ஒருமுறை பயன் படுத்தும் பிளாஸ்டிக் கையுறை வழங்கப்பட்டது. ஆனால், வெப்ப நிலையை பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்துவதில் பலருக்கு நடைமுறை சிக்கல் இருந்தது. அதேபோல், வாக்களித்த பிறகு வெளியே வந்த வாக்காளர்கள் தங்களது கையுறைகளை அதற்குரிய குப்பைத் தொட்டியில் போடாமல் திறந்த வெளியில் வீசிச் சென்றனர்.

சமூக இடைவெளி கேள்விக்குறி

சட்டப்பேரவைத் தேர்தலில் கரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றவே அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. அதன்படி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1,050-க்கும் அதிக மான வாக்காளர்கள் இல்லா மல் இருக்கும்படி வாக்குச்சாவடி கள் பிரிக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான வாக்குச்சாவடி களில் வாக்காளர்கள் யாரும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நெருங்கி நின்றபடியே இருந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,447 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், மொத்தம் 10 லட்சத்து 31 ஆயிரத்து 788 பேர் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 6 கம்பெனியைச் சேர்ந்த 490 துணை ராணுவப் படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 280 பேர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர், முன்னாள் ராணுவ வீரர்கள், ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவு விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி அரக்கோணம் (தனி) தொகுதியில் 12 சதவீதமும், சோளிங்கரில் 3 சதவீதமும், ராணிப்பேட்டையில் 15.10 சதவீதமும், ஆற்காட்டில் 12 சதவீதமும் வாக்குகள் பதிவானது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி அரக்கோணத்தில் 66.49 சதவீதமும், சோளிங்கரில் 74.68 சதவீதமும், ராணிப்பேட்டையில் 68.42 சதவீதமும், ஆற்காட்டில் 70.73 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

அதிமுக வேட்பாளர் மீது புகார்

அரக்கோணம் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி யிலும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவான ஏஜென்டுகள் தேர்தல்நடத்தை விதிகளை மீறி வேட் பாளரின் புகைப்படம், சின்னத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அடங்கிய புத்தகத்தை வைத்திருந் தனர். இதை நேற்று பிற்பகல் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கவுதம் சன்னா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கண்டறிந்தனர். விதிகளை மீறி வைத்திருந்த புத்தகங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இந்தப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க என கவுதம் சன்னா தேர்தல் நடத்தும் அலுவலர் சிவதாஸிடம் புகார் அளித்துள்ளார்.

வாக்கு எண்ணும் மையங்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைத்து எண்ண உள்ளனர். அதேபோல், வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க 3 மையங் களை ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, அணைக்கட்டு மற்றும் வேலூர் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்திலும், காட்பாடி தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் வேலூர் சட்டக்கல்லூரியிலும், குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு மையம் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் அமைத்துள்ளனர்.

மேற்கண்ட மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை பாதுகாப்பாக வைத்து அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ‘சீல்' வைக்கப் படும். வரும் மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x