Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM

வாக்காளர் அட்டை, வாக்காளர் சீட்டு இல்லாவிட்டாலும் - 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் : தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

தமிழகம் முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தமிழக தேர்தல் ஆணையம் முலம் கண்காணிக்கப்பட உள்ளது. அதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். படம்: ம.பிரபு

சென்னை

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பெரும்பாலும்அனைவருக்கும் வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டுவிட்டது. அது கிடைக்கப்பெறாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. வாக்காளர் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 அடையாள ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும்.

தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய,மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்பட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடியவங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், பான் கார்டு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (100 நாள் வேலை திட்டம்) பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,ஆதார் அட்டை, எம்.பி., எம்எல்ஏக்கானஅடையாள அட்டை ஆகிய 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்.

தங்கள் வாக்குச்சாவடி குறித்தவிவரங்களை 1950 என்ற இலவசதொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு அறியலாம். அந்தந்த மாவட்டத்தின் ‘எஸ்டிடி கோடு’ எண்ணை முதலில் பதிவிட்டு, தொடர்ந்து 1950 எண்ணை பதிவிட்டு டயல் செய்து, வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம். (உதாரணத்துக்கு, சென்னை எனில் 044 1950) ஓட்டர் ஹெல்ப்லைன் (Voter Helpline)என்ற ஸ்மார்ட் கைபேசி செயலி வழியாக, வாக்காளர் அட்டை விவரங்களை பதிவிட்டும், வாக்குச்சாவடி குறித்த விவரங்களை வாக்காளர்கள் அறியலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x