Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

புதுவையில் வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு - தொகுதிக்கு ஒரு மாதிரி வாக்குச்சாவடி அமைப்பு :

புதுச்சேரி மூலக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவப்பு கம்பளம், பந்தல் தோரணங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு மாதிரி வாக்குச்சாவடியை பார்வையிடும் மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க். படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

திருமண வீடுகளைப் போல் சிறப்பான அலங்காரங்கள் மற்றும் சிவப்பு கம்பள வரவேற்புடன் கூடிய சிறப்பு மாதிரி வாக்குச் சாவடிகள், புதுச்சேரியில் தொகுதிக்கு ஒன்று வீதம் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் இன்று நடைபெற உள்ள வாக்குப் பதிவை முன்னிட்டு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஆயத்த பணிகள் நேற்று முழுவீச்சில் நடைபெற்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் வாகன வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோடையையொட்டி வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வெயிலில் நிற்காமல் இருக்க மேற்கூரை வசதியும் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் வாக்குச்சாவடியை அடையாளம் காண உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக கரோனா காலம்என்பதால், போதிய இடைவெளியுடன் நிற்க அடையாளங்களும் வரையப்பட்டுள்ளன. 100 சதவீதவாக்களிப்பை நிறைவேற்றும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாதிரி வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை திருவிழா வீடுகள்போல் காட்சியமைக்கும் விதத்தில் வடிவமைத்து வருகின்றனர். மூலக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குப்பதிவு மையத்தை மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறும்போது, "தொகுதிக்கு ஒரு மாதிரி வாக்குச்சாவடி அமைத்துள்ளோம். மாதிரிவாக்குச் சாவடியில் செய்யப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளையும் குறிப்பிட்ட சில இடங்களில் ஆய்வுசெய்து தயாராக உள்ளதா என்பதை உறுதி செய்துள்ளேன். இதுபோல ஒரு தொகுதிக்கு மகளிர் மட்டுமே பணிபுரியும் ஒரு வாக்குச்சாவடியும் அமைத்துள்ளோம்” என்றார்.

மேலும் “மாதிரி வாக்குச்சாவடிகளின் வாசலில், சுபநிகழ்வு நடக்கும் வீடுபோல் வாழைத் தோரணம் கட்டி, வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் விதத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். உள்ளே வரும் வாக்காளர்களை பன்னீர் தெளித்து வரவேற்போம். சுப நிகழ்வுகள் நடக்கும் இல்லங்களில் இருப்பதுபோல் வாக்காளர்களை கவரும் வகையில் அனைத்துபணிகளும் நடந்து வருகிறது” என்று மாதிரி வாக்குச்சாவடிகளுக்கான அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x