Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

சென்னை சுற்றுப்புற 3 மாவட்டங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் - பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு :

திருவள்ளூரில் வாக்குச்சாவடிகளுக்கு எழுது பொருட்கள் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை அனுப்பிவைத்த ஊழியர்கள்.

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் தலைமை இடங்களில் இருந்து அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், பெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் 540 வாக்குப்பதிவு மையங்களில் 1,872 வாக்குச் சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

காஞ்சிபுரம் கீழம்பி உள்ள தனியார் கல்லூரியில் இருந்து காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிக்கும், திருப்புலிவனம் அரசு கல்லூரியில் இருந்து உத்திரமேரூர் தொகுதிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன. ஆலந்தூர், பெரும்புதூர் தொகுதிக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த தலைமை இடத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூரில் 991 வாக்குச்சாவடிகளும், பல்லாவரம் தொகுதியில் 608 வாக்குச்சாவடிகளும், தாம்பரம் தொகுதியில் 576 வாக்குச் சாவடிகளும், செங்கல்பட்டு தொகுதியில் 597 வாக்குச்சாவடிகளும், திருப்போரூர் தொகுதியில் 471 வாக்குச் சாடிகளும், செய்யூர் தொகுதியில் 325 வாக்குச்சாவடிகளும், மதுராந்தகம் தொகுதியில் 319 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு அந்தந்த தலைமை இடங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட விதம் குறித்து திருப்போரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பிரமணியன் கூறும்போது, "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட அறை அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு இயந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டன. அவை, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், வாக்குப்பதிவுக்கான அனைத்து பணிகளும் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி மையங்களில் கரோனா தொற்று தடுப்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களிப்பதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கீழ் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உட்பட வாக்குப் பதிவுக்கு தேவையான பொருட்கள், கரோனா பாதிப்பை தடுப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் வாகனங்கள் மூலம் நேற்று காலை 11 மணி முதல் 3 மணி வரை அனுப்பி வைக்கப்பட்டன.

349 மண்டல குழுக்கள் மூலமாக, போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்ட இந்த பொருட்கள் மாலைக்குள் அனைத்து வாக்குச்சாவடிகளையும் சென்றடைந்தன.

வாக்குச்சாவடி மையங்களில் கரோனா தொற்று தடுப்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x