Published : 06 Apr 2021 03:16 AM
Last Updated : 06 Apr 2021 03:16 AM

1,490 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா : திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தகவல்

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று(ஏப்.6) நடைபெறவுள்ள வாக்குப்பதிவை கண்காணிக்க 1,490 வாக்குச்சாவடிகளில் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு,திருவெறும்பூர், ரங்கம், மணப்பாறை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,147 மையங்களில் 3,292 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 156 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. 1,490 வாக்குச்சாவடிகளில் வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான 5,688 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,950 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்களித்ததை உறுதி செய்யும் 4,247 இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் 15,143 பணியாளர்கள், 188 நுண் பார்வையாளர்கள், 215 மண்டல அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 23,38,745 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 3,292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரம் மற்றும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கையுறை, முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்கள் ஆகியவை வாகனங்களில் ஏற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.

ரங்கம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு ரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி தொடங்கிவைத்து ஆய்வு செய்தார். அப்போது, ரங்கம் சார் ஆட்சியர் விசு மகாஜன், பயிற்சி ஆட்சியர் சித்ரா விஜயன், துணை ஆட்சியர் (பயிற்சி) பவித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x