Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

நிறுவனங்களுக்கான கணக்கு தணிக்கை சாப்ட்வேர் ஓராண்டு அவகாசம் நீட்டிப்பு : நிறுவன விவகார அமைச்சகம் அறிவிப்பு

நிறுவனங்கள் அனைத்தும் கணக்கு தணிக்கை தொடர்பான சாப்ட்வேரை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனை ஓராண்டு காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிறுவன விவகார அமைச்சகம் (எம்சிஏ) பிறப்பித்துள்ளது.

கம்பெனிகள் எனப்படும் நிறுவனங்கள் கணக்கு தணிக்கை தொடர்பாக மேற்கொள்ளும் அனைத்து வகையான திருத்தங்களையும் கண்டுபிடிக்கும் வகையில் டிராக்கிங் சாப்ட்வேரை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மார்ச் 24-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதன்படி ஏப்ரல் 1 முதல் இதைப் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

ஆனால் குறுகிய காலத்தில் இந்த சாப்ட்வேரை பயன்படுத்த நிறுவனங்களால் முடியாத சூழல் உருவானது. இத்தகைய சூழலில் மேலும் ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்படுவதாக நிறுவன விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நிறுவனங்களுக்கு பெருமளவு நிம்மதி அளிப்பதாக உள்ளது.

இந்தியாவில் மொத்தம் உள்ள 15 லட்சம் நிறுவனங்களில் 80 முதல் 85 சதவீதம் வரையிலான நிறுவனங்கள் இஆர்பி சார்ந்த சாப்ட்வேரை பயன்படுத்துவதில்லை. இதனால் கணக்கு தணிக்கையில் இவை மேற்கொள்ளும் திருத்தங்கள் குறித்த விவரங்களை கண்டுபிடிக்க முடியாது. பொதுவாக டேலி சாப்ட்வேரை பயன்படுத்தும் நிறுவனங்கள்தான் அதிகம். இவற்றின் கணக்கு தணிக்கையில் டிராக்கிங் செய்ய முடியாது. இதைக் கருத்தில் கொண்டே டிராக்கிங் வசதி கொண்ட சாப்ட்வேரை பயன்படுத்தவதை கட்டாயமாக்கியது எம்சிஏ. இப்போது இதற்கான கால அவகாசம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2022 ஏப்ரல் 1-ம் தேதி முதல் இது செயல்படுத்தப்படும் என தெரிகிறது.

இது குறித்து கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன் தெரிவித்ததாவது: நிறுவனங்களுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்களது வரவு, செலவு தொடர்பான கணக்கு தணிக்கை விவரங்களை பதிவு செய்யும்போது, அதில் தவறு செய்து திருத்தினால், அது எந்த தேதியில் திருத்தப்பட்டது என்ற விவரம் பதிவாகும். இவ்விதம் பதிவாகும் இஆர்பி சாப்ட்வேரை பெரிய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இத்தகைய டிராக்கிங் வசதி கொண்ட சாப்ட்வேரை பயன்படுத்தும்போது, தில்லு முல்லு செய்வதை கண்டுபிடிக்க முடியும். இத்தகைய சாப்ட்வேரை பயன்படுத்துமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது சரியான நடவடிக்கையே. இதற்கு இப்போது ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தகுந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x