Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM
அரசியலில் குறுக்கு வழியில் வந்தவர் யார் என்பது தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் செய்த விமர்சனத்துக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி), காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் கயல்விழி செல்வராஜ் மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோரை ஆதரித்து,தாராபுரம் மற்றும் சென்னிமலையில், திமுக இளைஞா் அணி மாநில செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கடந்த 31-ம் தேதி பரப்புரை செய்தார்.
தாராபுரத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் என் மீது மோடி ஒரு குற்றச்சாட்டு வைத்துள்ளார். ‘நான் குறுக்கு வழியில் முன்னுக்கு வந்ததாக’ மோடி சொல்லி உள்ளார்.
குஜராத் முதல்வராக இருந்தபோது பலரையும் ஓரங்கட்டிவிட்டு, குறுக்கு வழியில் வந்தவர் மோடி. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோரை ஓரங்கட்டினார். சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜெட்லி ஆகியோர் மோடியின் தொல்லை தாங்காமல் இறந்தே போய்விட்டனர். வெங்கய்யா நாயுடுவை ஓரங்கட்டியவர் மோடி,’’ என்றார்.
இந்நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் மகள் பான்சூரி ஸ்வராஜ், தனது ட்விட்டர் பதிவில், ‘எனது தாயின் நினைவுகளை தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தாதீர்கள். உங்களது பேச்சு தவறானது. மோடி எனது தாய் மீது, மிகவும் மரியாதை வைத்திருந்தவர். தாயார் மறைந்தபோது, எங்களுடன் கட்சியும் மோடியும் நின்றனர். உங்கள் பேச்சு என்னை காயப்படுத்தி உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தற்போது சமூகவலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் குறித்து ஒருமையிலும், தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கயம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜனிடம், அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
காங்கயம் தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பாகவும், அதிமுகவினர் அளித்த புகார் தொடர்பாகவும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT