Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM

திமுகவினர் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் - மு.க.ஸ்டாலின் மகள் பங்களா உட்பட 28 இடங்களில் வருமானவரி சோதனை : ஐபேக் அலுவலகம், சபரீசனின் நண்பர்கள் வீடுகளிலும் அதிகாரிகள் விசாரணை

தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் பங்களா, ஐபேக் நிறுவனம் உட்பட திமுகவினர் தொடர்புடைய 28 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் சபரீசன் வசிக்கும் சென்னை நீலாங்கரை பங்களாவுக்கு வருமானவரித் துறை அதிகாரிகள் 8 பேர் நேற்று காலை 8.30 மணியளவில் 2 கார்களில் வந்தனர். இதில் 4 அதிகாரிகள் மதியம் 12 மணியளவில் சோதனையை முடித்துவிட்டு வெளியேறினர். மற்றவர்கள் இரவு 8 மணிக்கு சோதனையை முடித்துவிட்டு புறப்பட்டனர்.

தேர்தல் வியூக நிறுவனமான ஐபேக் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. முடிவில் பணமோ, ஆவணங்களோ எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் பென் டிரைவ், ஹார்டுடிஸ்க் போன்ற டிஜிட்டல் தகவல்களையும் வங்கி விவரங்கள் தொடர்பான சில ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி 2 பைகளில் எடுத்துச் சென்றனர். சோதனை நடந்தபோது சபரீசனும் செந்தாமரையும் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.

சோதனை நடந்த தகவல் அறிந்து, நூற்றுக்கணக்கான திமுகவினர் பங்களா முன்பு குவிந்தனர். இதனால் போலீஸாரும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப்படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

செந்தாமரை வீட்டில் சோதனை நடந்த அதேநேரத்தில் சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும் சோதனை நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் மறியல் செய்தனர். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

மேலும் சென்னை நந்தனத்தில் ஜெயமுருகன் என்பவருக்கு சொந்தமான மதுபான ஆலை, வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இவர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய உளியின் ஓசை, பெண் சிங்கம் ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, ஜி ஸ்கொயர் பாலா என்பவரது வீட்டிலும் சபரீசனின் நண்பர்கள், உறவினர்கள் என மேலும் 6 இடங்களிலும் அதிகாரி கள் சோதனை நடத்தினர். இதனிடையே சபரீசன் தொடர்பில் உள்ள ஏராளமான தனியார் நிறுவனங்களிலும் சோதனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செந்தில் பாலாஜி வீடு

இதேபோல் கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீடு, கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக், ராயனூரில் உள்ள திமுக கரூர் மேற்கு நகர பொறுப்பாளர் சரவணன், கொங்கு மெஸ் மணி ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

திருவையாறு தொகுதி திமுக வேட்பாளர் துரை.சந்திரசேகரின் நண்பர் முரசொலி என்பவரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரையின் தேவனாம்பட்டு வீட்டிலும் சோதனை நடந்தது. தமிழகம் முழுவதும் திமுகவினர் தொடர்புடைய 28 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங் களை கைப்பற்றி உள்ளனர்.

சோதனை குறித்து அதிகாரிகள் விளக்கம்

சோதனை குறித்து வருமானவரித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று தனிநபர்கள் மதுபான ஆலைகள், ரியல் எஸ்டேட் துறை அலுவலகங்கள் உட்பட 3 குழுமங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனங்களில் இருந்து பிரபலமான அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் உறவினர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதற்கான தகவல்கள் கிடைத்தன. அதன்பேரிலேயே இந்த சோதனை நடைபெற்றது. பணம் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் கிடைத்ததன் பேரில் 28 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x