Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM

சிங்கார சிங்காநல்லூராக தொகுதியை மாற்றுவேன் : மநீம வேட்பாளர் மகேந்திரன் உறுதி

சிங்காநல்லூர் தொகுதியை சிங்கார சிங்காநல்லூராக மாற்றுவேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் போட்டியிடுகிறார். இவர், சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தினமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். லட்சுமி மில்ஸ் சந்திப்பு அருகே அவர் நேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து நவ இந்தியா, எஸ்.ஓ.பங்க், பீளமேடு, கிருஷ்ணம்மாள் கல்லூரி சந்திப்பு, ஹோப்காலேஜ், டைடல் பார்க் பகுதி, தண்ணீர் பந்தல் சாலை, செங்காளியப்பன் நகர், காய்கடை சந்திப்பு, புலியகுளம் விநாயகர் கோயில், மீனா எஸ்டேட், ராமானுஜம் நகர், ஒண்டிப்புதூர், நந்தா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது தனது வாக்குறுதிகள் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்து, டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தார். வேட்பாளர் மகேந்திரனின் எளிமையான பிரச்சாரம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரச்சாரத்தில் மகேந்திரன் பேசும்போது, ‘‘நான் வெற்றி பெற்றால், தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். மக்கள் பிரதிநிதியாக சட்டசபையில் மட்டுமின்றி, எப்போதும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வார்டு தோறும் பிரதிநிதிகளை நியமிப்பேன். இப்பகுதிகளில் உள்ள குப்பை அகற்றாமல் இருத்தல், சாக்கடைகளை முறையாக சுத்தம் செய்யாமல் இருத்தல் போன்ற பிரச்சினைகளை சரி செய்வதோடு, சிங்காநல்லுார் தொகுதியை அழகுபடுத்தி சிங்கார சிங்காநல்லூராக மாற்றுவேன். அதற்கான திட்டமும் என் வசம் உள்ளது. அதேபோல், தொழில்கள், தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்துக்கும், மகளிர் வேலை வாய்ப்புக்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

அனைத்து தொழில்களின் வளர்ச்சிக்கும் கவனம் செலுத்துவதோடு, திறன்மேம்பாட்டு பயிற்சி, திறன் வளர்ப்பு பயிற்சி போன்றவையும் செயல்படுத்தப்படும். வர்த்தக அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஒரு தனி கருத்தரங்கு நடத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவேன். தொகுதியின் மிக முக்கிய பிரச்சினைகளான விமான நிலைய விரிவாக்கம், கிரீன் பீல்டு விமான நிலைய கட்டமைப்பு, திருச்சி சாலை – அவிநாசி சாலை இணைப்புச் சாலை மேம்படுத்துதல், பொது நுாலகம் அமைத்தல், தொகுதி முழுவதும் வை–பை வசதி, நவீன மருத்துவமனை, ஏரி, குளம் மேம்படுத்தி பூங்கா அமைத்தல் உள்ளிட்ட வசதிகளையும் செய்து தருவேன்,’’ என்றார். பிரச்சாரத்தின்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x