Published : 03 Apr 2021 03:15 AM
Last Updated : 03 Apr 2021 03:15 AM

வாணியம்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் - 60 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

வாணியம்பாடி

வாணியம்பாடியில் அமைக்கப்பட் டுள்ள வாக்கு எண்ணும் மையம் முழுவதும் 60 கண் காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் வாணியம்பாடி ஜெயின் மகளிர் கலைக்கல்லூரியில் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. இதற் காக, பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் வாக்கு எண்ணும் மையத்தில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘வாணியம்பாடி ஜெயின் மகளிர் கல்லூரியில் 4 சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.

ஜெயின் மகளிர் கல்லூரியின் தரைத்தளத்தில் திருப்பத்தூர் தொகுதிக்கான வாக்குகளும், முதல் தளத்தில் ஆம்பூர் தொகுதிக்கான வாக்குகளும், 2-ம் தளத்தில் வாணியம்பாடி தொகுதியில் பதிவாகும் வாக்குகளும், 3-வது தளத்தில் ஜோலார்பேட்டை தொகுதியில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இதற்காக ஒவ்வொரு தளத்திலும் மின்னனு வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைத்து மே 2-ம் தேதி வரை அதை கண்காணிக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் வாக்கு எண்ணும் அறைகளில் 14 மேஜைகள் போடப்பட்டு, அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் நாளில்அனைத்தையும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் தொலைக்காட்சியில் கண்காணித்திட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பெட்டிகள் வாகனங்களில் கொண்டு வரும்போது 4 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தனித்தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த தொகுதிக்கான வழித்தடங்களில் வரும் வாகனங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வரிசைப்படி இறக்கி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மையம் முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயின் கல்லூரி முழுவதும் 60 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கேமிராக்களின் சோதனை அடிப்படையில் சரிபார்க்கும் பணிகளும் நடந்து வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் எந்தவித பிரச்சனையும், சந்தேகமும் இல்லாத வகையில் மையம் முழுவதும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன’’. என்றார்.

இந்த ஆய்வின்போது, காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) பங்கஜ் அத்துல்கார், துணை காவல்கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், உதவி செயற் பொறியாளர் பிரபாகரன், மின் உதவி பொறியளார் யோகேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x