Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM

பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது : சோனியா உட்பட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாட்டின் ஜனநாயகத்தின் மீதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் பாஜக பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாஜக அல்லாத கட்சிகளின் உரிமைகள் பறிக்கப்படுவதுடன், ஜனநாயகக் கடமைகளை ஆற்ற விடாமலும் அவை தடுக்கப்படுகின்றன. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் மிரட்டப் படுகின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை செயல்பட விடாமல் பாஜக தலைமையிலான மத்திய அரசு தடுக்கிறது. ஒரே கட்சியின் ஆட்சிதான் இந்தியா வில் இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. இது, ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும்.

பாஜக அல்லாத மாநில அரசுகளை கவிழ்ப்பதற்காக எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்குவது; தேசிய சொத்துகளை தனியார்மயமாக்குவது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

இதுபோன்று இந்தியாவின் ஜனநாயகத்தின் மீதும், அரசிய லமைப்புச் சட்டத்தின் மீதும் தாக்கு தல் நடத்தி வரும் பாஜகவுக்கு எதிராக ஒத்தக் கருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளுவதற்கான தருணம் வந்துவிட்டதாக நம்புகிறேன். பாஜவுக்கு எதிரான இந்தப் போரில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் உறுதியளிக்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மம்தா கோத்ரம்

நந்திகிராமில் நேற்று செய்தி யாளர்களிடம் மம்தா பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘நந்திகிராமில் 2-ம் கட்ட பிரச் சாரத்தின் போது நான் பல கோயில்களுக்குச் சென்றேன். அப்போது என்னுடைய கோத்ரம் குறித்து கோயில் குருக்கள் கேட்டார். அப்போது நான் மா மாட்டி மனுஷ் (தாய், தாய்நாடு, மக்கள்) என்று சொன்னேன். இதைத்தான் 2011-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் எனது தாரக மந்திரமாக உச்சரித்தேன்.

இது நான் திரிபுராவில் உள்ள திரிபுரேஸ்வரி கோயிலுக்குச் சென்றதை நினைவுபடுத்தியது. அங்கும் கோயில் குருக்கள் என் கோத்ரத்தை கேட்டபோது நான் மா மாட்டி மனுஷ் என்றுதான் சொன்னேன். ஆனால்நான் சாண்டில்ய கோத்ரத்தைச் சேர்ந்தவள்" என்றார்.

சாண்டில்ய கோத்ரம் என்பது மேற்கு வங்கத்திலுள்ள 8 உயர் பிராமண வகுப்பினரில் ஒரு பிரிவாகும்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறும்போது, “நான் என்னுடைய கோத்ரத்தை வெளியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தோல்வி பயத்தில் முதல்வர் மம்தா என்னென்னவோ உளறி வருகிறார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x