Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM

பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளை தப்ப விடமாட்டேன்: மடத்துக்குளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

உடுமலை

பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளை நான் தப்பவிட மாட்டேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன், உடுமலை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.தென்னரசு, வால்பாறை தொகுதி இ.கம்யூ., வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

பாஜக ஆட்சியில் சிறுகுறுதொழில் வளர்ச்சி அதலபாதாளத் துக்கு போய்விட்டது என்கின்றனர் தொழில் துறையினர். பணமதிப்புநீக்கத்தால் நாடு வளர்ச்சி பெறும்என்றார்கள். உண்மையில் கோமா நிலைக்கு தள்ளப்பட்டவனுக்கு, மயக்க ஊசி போட்டதைப் போலவே இருந்தது.

ஜெயலலிதா மரணத்துக்குப்பின் அதிமுகவினரை மிரட்டி, அவர்கள் நிழலில் பயணிக்க பாஜக திட்டமிட்டுள்ளனர். பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்தது. ஆனால் மக்களவைத் தேர்தலில் ஓரிடம்கூட கிடைக்கவில்லை. அடுத்து வரும் தேர்தலிலும் ஓரிடம்கூட கிடைக்காது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பிரதமர் கூறியுள்ளார். உ.பி.யில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது. அங்கு 2019-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரானகுற்றம் 59,853 நடைபெற்று உள்ளதுஎன தேசிய குற்றப்பதிவு ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்துக்கே அவமானம். இச்சம்பவத்தில் போலீஸாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பொள்ளாச்சி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை யார் விட்டாலும், நான் தப்பவிடமாட்டேன். அவர்கள் மீது நடவடிக்கைஎடுப்பது உறுதி. பொள்ளாச்சி சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏன் பேசவில்லை?

உடுமலை, மடத்துக்குளம், அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும். உடுமலையில் தக்காளி கூழ் தயாரிப்பு நிறுவனம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நவீனம், மலைவாழ் கிராமங்களில் அடிப்படை வசதி, ஆனைமலையாறு-நல்லாறு அணை திட்டம், அப்பர் அமராவதி அணைதிட்டம், அமராவதி, திருமூர்த்தி அணைகள் ஆண்டுதோறும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக வளர்ச்சிக்காக 7 உறுதிமொழிகள் வெளியிட்டுள்ளேன், அதனை உறுதியாக நிறைவேற்றுவேன். இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.மடத்துக்குளத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x