Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடிதான் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் :

ஜல்லிட்டுத் தடையை நீக்க உதவிய உண்மையான ஹீரோ பிரதமர் நரேந்திர மோடி என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் நாட்டை சீர்குலைத்து விட்டது. எந்த வளர்ச்சிப் பணிகளும் இல்லாமல் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது. நாட்டை இருளுக்குள் தள்ளியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்ந்து திமுக 16 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. மத்தியிலும், மாநிலத்திலும் எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆனால் இன்றைய மத்திய பாஜக ஆட்சியில் தமிழகத்துக்குத் தேவையான நிதி உதவியை கொடுத்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற நாங்கள் பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும். ஆனால் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தது பாஜக அரசு. இதற்காக பிரதமருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

எனக்கு முன்னால் பேசியவர்கள் என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்றனர். இதன் பின்னால் உள்ள ஒரு உண்மையை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். காங்கிரஸ்-திமுக ஆட்சியின் போது தான் காளையை விலங்கின பட்டியலில் சேர்த்தனர். அதற்காகத் தான் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. தடையை நீக்கக் கோரி மெரினாவில் 15 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நான் தமிழக முதல்வராக இருந்தேன். அப்போது பிரதமரை அணுகி இப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என கோரினேன். அவர் 24 மணி நேரத்தில் அரசாணை பிறப்பிக்க நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க உதவினார். ஜல்லிகட்டு நாயகன் என்ற பெருமை பிரதமரையே சேரும். இதில் உண்மையான ஹீரோ அவர் தான். 2023-ம் ஆண்டுக்குள் மத்திய அரசு உதவியோடு தமிழகத்தில் குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மணித்துளியையும் விரயமாக்காமல், இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். உலக அரங்கில் இந்தியா பெருமையடைய அவரது உழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதன்மூலம் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. சுமார் 5,200 கி.மீ., சாலை அமைக்க ரூ.1,05,000 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியது. தமிழகம் நீர் பற்றாக்குறை மாநிலம். கோதாவரி–காவிரி இணைப்புத் திட்டம் மூலம் இதனைப் போக்க முடியும். இதன் மூலம் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இது மிகப்பெரிய திட்டம். தமிழக மக்கள் மீது பேரன்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்துக்கான நிதியினை ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் பெரு நகரங்கள் வளர்ச்சிப் பாதையை அடைந்து வருகிறது. உட்கட்டமைப்பு சிறப்பாக உள்ளதால் முதலீட்டாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். உட்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதால் தடையற்ற மின் விநியோகம் மூலம் தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.

2019-ம் ஆண்டில் தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம் சுமார் ரூ.300500 கோடி தொழில் முதலீடு செய்ய முன் வந்தனர். 304 தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இது வரலாற்றுச் சாதனை. இந்த தொழிற்சாலைகள் தொடங்கப்படும் போது நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x