Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீட்பு : போக்குவரத்து நெரிசல் விரைவில் சீரடைய வாய்ப்பு

சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்ட இழுவைப் படகுகள்.படம்: ஏஎப்பி

கெய்ரோ

சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத சரக்குக் கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டு பயணிக்கத் தயாரானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 23-ம் தேதி ஆசியாவிலிருந்து புறப்பட்டு ஐரோப்பா சென்று கொண்டிருந்த எவர் கிவன் என்ற 400 மீட்டர் நீளமுள்ள ராட்சத சரக்குக் கப்பல் எகிப்தில் உள்ள செயற்கையாக உருவாக்கப்பட்ட சூயஸ் கால்வாயில் சகதியில் சிக்கி குறுக்கே நின்றுபோனது. 20,000-க்கும் மேலான கண்டெய்னர்களைக் கொண்டு சென்ற இந்தக் கப்பல் கால்வாயை அடைத்தபடி நின்றுபோனதால் 400க்கும் மேலான சரக்குக் கப்பல்கள் அவ்வழியே பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு நாளைக்கு ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் கொண்டுசெல்ல முடியாமல் தேங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது.

ஏற்கெனவே கரோனா பாதிப்புகாரணமாக கடந்த ஒரு வருடமாக சர்வதேச வர்த்தகம் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில் தற்போது சூயஸ் கால்வாயில் ஒரு வாரமாக சிக்கிய எவர் கிவன் கப்பலால் மீண்டும் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது உலகச் சந்தையில் கவலையை உண்டாக்கியது.

சூயஸ் கால்வாய் உலக வர்த்தக போக்குவரத்தில் 10 சதவீத பங்கு வகிக்கிறது. மேலும் உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் இக்கால்வாய் வழியாக 7 சதவீதம் கொண்டு செல்லப்படுகிறது. எனவே கால்வாயை அடைத்துக்கொண்டிருந்த கப்பல் விரைவில் மீட்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

இந்நிலையில் சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிவன் கப் பலை மீட்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டது. இழுவை படகுகள் மூலம் தொடர் முயற்சி எடுக்கப்பட்டுவந்த நிலையில் மீட்பதற்கு சில வாரங்கள் ஆகும் எனக் கூறப்பட்டது.

ஆனால், நேற்று காலை சகதியில் சிக்கிய கப்பலை மிதக்கும் நிலைக்கு மீட்புக் குழு கொண்டுவந்தது.

இதுகுறித்து சூயஸ் கால்வாய் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில் ‘எவர் கிவன் கப்பலை மீட்கும் முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 18 மீட்டர் ஆழத்திற்கு தோண்டப்பட்டு 27,000 கியூபிக் மீட்டர் அளவிலான மணல் வெளியேற்றப்பட்டுள்ளது’ என்றனர்.

இதுமட்டுமல்லாமல் கப்பல் மிதக்கும் நிலைக்கு வருவதற்கு ஒருவகையில் பவுர்ணமி நாளில் ஏற்பட்ட கடல் அலைகள் உதவியாக இருந்ததாகவும் கருதப்படுகிறது. இதனால் தண்ணீரின் மட்டம் உயர்ந்ததால் கப்பலை மிதக்கும் நிலைக்குக் கொண்டுவர முடிந்ததாகவும் கூறினார்கள். இதையடுத்து தொடர் முயற்சியின் மூலம் மீட்புப் படகுகள் மூலமாக எவர் கிவன் கப்பலை மதியம் 3.00 மணியளவில் முற்றிலுமாக மீட்டதாகக் கூறியுள்ளனர்.

எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயின் குறுக்கே இருந்து நீக்கி பிற கப்பல்கள் பயணிக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி யுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x