Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM

போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - செந்தில்பாலாஜி உட்பட 47 பேர் மீது குற்றப் பத்திரிகை : வழக்கு விசாரணை ஏப்.9-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 47 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் புதிதாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2011-15 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. இவர் அமைச்சராக இருந்தபோது, அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.62 கோடிபெற்று மோசடியில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி மீது கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகியோர் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

சென்னையில் உள்ள எம்.பி.,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் செந்தில்பாலாஜி மற்றும் பணம் பெறுவதற்கு உடந்தையாக இருந்த எம்.கார்த்திகேயன் மற்றும்போக்குவரத்து கழக மூத்த அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை என புகார் எழுந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் புதிதாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, பி.சண்முகம், எம்.கார்த்திகேயன், சென்னை மாநகர போக்குவரத்து கழக முன்னாள் நிர்வாக இயக்குநர் டி.ஆல்பிரட் தினகரன், நிர்வாக இணை இயக்குநர் வி.வரதராஜன், முன்னாள் மூத்த துணை மேலாளர் எஸ்.அருண் ரவீந்திர டேனியல், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிர்வாக இயக்குநர் கணேசன் மற்றும் பணியாளர் நியமனங்களை மேற்கொண்டோர் என மொத்தம்47 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட் டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

2015-ல் ஜெயலலிதாவால் போக்குவரத்து துறை அமைச்சர் பதவியில் இருந்தும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்தும் செந்தில்பாலாஜி நீக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர், கடந்த 2018-ல் திமுகவில் இணைந்தார். தற்போது சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளராக கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x