Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

மகளிருக்கு இலவச பேருந்து பயணம், அரசுப் பணிகளில் 50% வேலைவாய்ப்பு - மழலையர் முதல் உயர்கல்வி வரை பெண்களுக்கு கல்வி இலவசம் : கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்; புதுச்சேரிக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுச்சேரிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் வெளியிட்டனர். உடன் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர். படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரிக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. மழலையர் முதல் உயர்கல்வி வரை பெண்களுக்கு இலவசம், அரசு வேலைகளில் மகளிருக்கு 50 சத வேலைவாய்ப்பு, கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர், பள்ளி மாணவர்களுக்கு டேப்லேட் உள்பட பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இதில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

புதுச்சேரி பாஜக சார்பில் சட்டப்பேரவை தேர்தலுக்கு `எங்கள் வாக்குறுதி’ என்னும் தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி அண்ணாசாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் கலந்து கொண்டு பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட பாஜக வேட்பாளர்கள் பங்கேற்றனர்.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

தொழில்: சர்வதேச தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு முதலீடுகள் ஈர்க்கப்படும். புதிய தொழில் மற்றும் முதலீட்டுக் கொள்கையை உருவாக்கி மானியத்துடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கப்படும். பிப்டிக் நிறுவனத்தை மீட்டெடுத்து மறுசீரமைத்து நிதியுதவி அளிக்கப்படும்.

புதுவையில் ஒருங்கிணைப்பட்ட மாபெரும் ஆடை உற்பத்தி தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படும். துறைமுகம், வணிகம், வர்த்தகம், சுற்றுலாத்துறை ஆகியவற்றின் நுழைவு வாயிலாக புதுச்சேரி செயல்படும். தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் ‘சென்டர் ஆப் எக்சலன்ஸ்’ அமைக்கப்படும்.

இலவச மடிக்கணினி: புதுவைக்கென தனி பள்ளி கல்வி தேர்வாணையம் உருவாக்கப்பட்டு 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். அரசு பள்ளிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ‘ஸ்மார்ட்’ பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ‘டேப்லெட்’ வழங்கப்படும். அனைத்து கொம்யூன்களிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் ஒரு ராணுவ பள்ளி தொடங்கப்படும்.

மழலையர் முதல் உயர்க்கல்வி வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும். அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

மருத்துவம், ஆன்மிகம், நல்வாழ்வு மற்றும் சாகச விளையாட்டுகளுடன் கூடிய சர்வதேச சுற்றுலா தலமாக புதுவை மாற்றப்படும். மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்கு 150 அடியில் சிலை நிறுவப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச பொது போக்குவரத்து வசதி செய்து தரப்படும். மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கரோனா பேரிடர் காலத்தில் பெறப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

சுயஉதவி குழுக்களுக்கு வட்டியில்லாத ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். அனைத்து மகளிருக்கும் இலவச மருத்துவ உதவி வழங்கப்படும், உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 50 சதவீத பெண்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். புதுச்சேரி மாணவர்களுக்கு 30 சத இடஒதுக்கீடு கல்லூரிகளில் தரப்படும். அரசு தேர்வு எழுத வாய்ப்பு இழந்த இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்.

நடமாடும் நியாயவிலைக்கடை ஏற்படுத்தப்படும். சென்னையுடன் புதுவை மற்றும் காரைக்காலை இணைப்பதற்கு கடல் வழி, விமானம் மற்றும் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும்.

விவசாயிகளின் வருமானம் அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும். ஒருங்கிணைந்த ஆடு, கோழி வளர்ப்பு மையங்கள் உருவாக்கப்படும். அதேபோல், மீனவர்களின் வருமானமும் அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும். அனைத்து மீனவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டம் அனைவருக்கும் நடைமுறைப்படுத்தப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மருத்துவ பரிசோதனை கூடங்கள் மானிய விலையில் அதிகரிக்கப்படும். அதிநவீன புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும். ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் 100 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படும். 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் மருந்துகள் இலவசமாக தரப்படும்.

மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தரப்படும். ஊனமுற்றோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.1,750ல் இருந்து ரூ.4,000 ஆகவும், விதவை ஓய்வூதியம் ரூ.2,000 ல் இருந்து ரூ.3,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

ஆன்மீக வழிபாட்டுத்தலங்களும் அரசால் நிர்வகிக்கப்படாது. கோயில் நில அனைத்து ஆக்கிரமிப்பும் அகற்றப்படும். அனைத்து கோயில்களும் பாதுகாக்கப்படும். காரைக்கால் திருநள்ளாறு கோயிலில் பழமை மாறாமல் புதிய வளாகம் அமைக்கப்பட்டு, தொன்மை மாறாமல் பாதுகாக்கப்படும்.

அரசு முதலீட்டை அபிவிருத்தி செய்ய நிதி ஆணையம் உருவாக்கப்படும். இளைஞர்களுக்கு அரசு பணியை உறுதி செய்ய புதுச்சேரி அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தப்படும். நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டை முடிவுக்கு கொண்டு வரவும், ஊழலை ஒழிக்கவும் வழி செய்யப்படும். அரசு சேவை நிலை மற்றும் புகார்களை தீர்க்க குழு அமைக்கப்படும்.

10 சதவீத இடஒதுக்கீடு: புதுச்சேரியில் ரவுடிகள், மாபியாக்கள் இல்லாத நிலையை உருவாக்கி குற்றவாளிகள் இல்லாத நகரமாக்கப்படும். பொருளாதார ரீதியில் பலவீனமானோருக்கு அனைத்து கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அமலாகும்.

இவ்வாறு புதுச்சேரிக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x