Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : ரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள 505 வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று ரங்கத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் கே.என்.நேரு(திருச்சி மேற்கு), அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்), சவுந்தரபாண்டியன் (லால்குடி), ந.தியாகராஜன் (முசிறி), ஸ்டாலின் குமார் (துறையூர்), இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), பழனியாண்டி (ரங்கம்), கதிரவன் (மண்ணச்சநல்லூர்), அப்துல்சமது (மணப்பாறை ) ஆகியோரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நேற்று ரங்கம் ராஜகோபுரம் முன்பு பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல திமுக. பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாகுபாடு இன்றி இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் மாண்புகளையும் பாதுகாப்பதே திமுகவின் கடமை. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவது மட்டுமல்ல; ஆட்சிக்கு வந்த பிறகும் நிச்சயம் இதை கடைபிடிப்போம்.

மத்திய பாஜக அரசும், தமிழகத்தில் ஆளும்கட்சியும் தங்கள் ஆட்சி காலத்தில் என்ன செய்துள்ளோம் என்பது பற்றி சொல்லாமல், பிரச்சாரத்தில் திமுகவை விமர்சித்து பேசி வருகின்றனர். காரணம், அவர்கள் எதுவுமே செய்யவில்லை. எனவே, அதிமுக, பாஜகவை இந்த நாட்டை விட்டே விரட்டும் வகையில் வரும் ஏப்.6-ம் தேதி திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ‘சசிகலாவை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், முதல்வர் பழனிசாமி ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்’ என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இதைப் பார்க்கும்போது இப்போதும் அதிமுகவில் கோஷ்டி பூசல் தொடர்ந்து கொண்டிருப்பது தெரிகிறது. மக்களைப் பற்றி கவலைப்பட முடியாத நிலையில், இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும், இதுவரை ஒரு செய்தியும் வரவில்லை. ஆளும்கட்சியினர் தங்களது அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள பாஜகவிடம் அடிமையாக இருந்து, தமிழர்களின் உரிமைகளைப் பறிகொடுத்து இருப்பதைத் தவிர இவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. எனவே, மக்களை மறந்திருக்கும் இவர்களை, மக்களும் மறக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள 505 வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். இந்தியை திணித்து, நீட் மூலம் மாணவர்களுக்கு கொடுமை செய்யும் அதிமுக, பாஜகவுக்கு இத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். தன்மானம், சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்கான தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x