Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM

ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக - கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் மாற்றம் :

நாகராஜ், டேவிட்சன் தேவாசீர்வாதம்

கோவை

தமிழகத்தில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒரே இடத்தில் 3 வருடங்கள் அல்லது அதற்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், நடப்புத் தேர்தல் சமயத்தில், உயர் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்படவில்லை. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் ஆளும் கட்சிக்கு இவர்கள் உதவியாக இருப்பர் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தரப்பில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. திமுக சார்பில், 15 காவல்துறை அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினர்.

அதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் ஆகியோரை, தேர்தல் ஆணையம் நேற்று அதிரடியாக பணியிடம் மாற்றி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் கூறும்போது, ‘‘3 வருடங்களாக கோவையில் ஆட்சியராக ராசாமணி தொடர்ந்து வருகிறார். 3 ஆண்டுபணிக் காலத்தை காவல் ஆணையர் சுமித்சரணும் நெருங்கிவிட்டார். அவரால் உள்ளூர் அமைச்சரின் உத்தரவை மீறி சுதந்திரமாக இயங்க முடியவில்லை.

தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் கண்காணிப்புப் பணியை ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்கொள்ளவில்லை. இதை ஆளும்கட்சியினர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.

மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையராக பணியாற்றிய செந்தில்அரசன், தெற்கு ஆர்டிஓவாக பணியிடம் மாற்றப்பட்டு, தொண்டாமுத்தூர்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின்கீழ் பணியாற்றியவர். தற்போது அவர் போட்டியிடும் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் சமயத்தில் அவருக்கு சாதகமாக செயல்பட வாய்ப்புகள் உள்ளன. பணிக்காலம் முடிந்தும் பணி நீட்டிப்பில் உள்ளஉதவி ஆணையரும், தெற்குதொகுதி உதவி தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல, பல்வேறு பிரிவுகளில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.

இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியராக எஸ்.நாகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக பணியாற்றியவர். மாநகர காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை தொழில்நுட்ப பிரிவுகூடுதல் டிஜிபியாக பணியாற்றியவர். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஐஜி அந்தஸ்தில் இருந்தது. தற்போது கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உயர்த்தப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இன்று பதவியேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x