Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM

கோவையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் - ரூ.82.73 லட்சம் ரொக்கம், 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் :

கோவை

கோவையில் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் இரு நாட்கள் நடத்திய சோதனைகளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.82.73 லட்சம் ரொக்கம், 1000 கிலோ ரேஷன் அரிசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்னையராஜபுரம் சவுடேஸ்வரி அம்மன் கோயில் அருகே பொறுப்பு அதிகாரி கணேஷ்குமார் தலைமையில் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே எஸ்.சபேசன் என்பவரால் வாகனத்தில் ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.4 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ.ஜே.செந்தில் அரசனிடம் ஒப்படைத்தனர்.

சிங்காநல்லூர் ஜி.வி.ரெஸிடென்ஸி மசக்காளிபாளையம் பகுதியில் நடத்திய சோதனையில், சுங்கம் காந்தி நகரை சேர்ந்த ஏ.தாமஸ், சிவகங்கையை சேர்ந்த ஆர்.பிரவீன் ஆகியோர் காரில் கொண்டு வந்த 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, பொள்ளாச்சி குடிமைப் பொருள் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

காட்டூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ராமகிருஷ்ணா மருத்துவமனை ஐயப்பன் கோயில் சாலை சந்திப்பு பகுதியில் நேற்று மேற்கொண்ட சோதனையில், வால்பாறையை சேர்ந்த சி.மைக்கெல்ராஜ் என்பவர் காரில் கொண்டு வந்த 394 திமுக ஸ்டிக்கர்கள், 250 காலண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், சரவணம்பட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட சத்தியமங்கலம் சாலை ராமகிருஷ்ணாபுரம் தண்ணீர் டேங்க் அருகில் கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படையினர், பொறுப்பு அதிகாரி ராஜலட்சுமி தலைமையில் நேற்று முன்தினம் இரவு மேற்கொண்ட வாகன தணிக்கையில், சிறிய சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் மனோஜ்குமார் என்பவரால் எடுத்து வரப்பட்ட ரூ.78 லட்சத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு சரவணம்பட்டி காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. இதேபோல சாய்பாபா காலனி அழகேசன் சாலையில் வெங்கடேஷ் என்பவரிடமிருந்து ரூ.73,420 பறிமுதல் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x