Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 03:13 AM

கடனுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட முடியாது : உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி

ஊரடங்கு காலத்தில் கடன்கள் மீதான வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தெரிவித்துவிட்டது.

கடந்த ஆண்டு கரோனா வைரஸ் வேகமாக பரவியதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தனி நபர் கடன், வீட்டுக் கடன், கடன் அட்டைக் கடன் உள்ளிட்ட அனைத்து கடன் தவணை செலுத்துவதற்கு 6 மாத காலம் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் வட்டி மீதான வட்டியை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

ஆனால் 6 மாத காலத்திற்கும் முழுவதுமாக வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷாமற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகியோரடங்கிய அமர்வு இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

பொருளாதார விவகாரம் சார்ந்த கொள்கை முடிவுகளை நீதிமன்றம் ஆய்வு செய்வது சரியாக இருக்காது. வட்டி மீதானவட்டியை தள்ளுபடி செய்து மத்தியஅரசு அறிவித்ததில் எவ்வித உள்நோக்கமும் இருப்பதாக நீதிமன்றம் கருதவில்லை. குறிப்பிட்ட கடன்களுக்கு இத்தகைய சலுகையை அறிவித்ததில் எவ்வித எதிர்பார்ப்பும் இருந்ததாகத் தெரியவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘ஆறு மாத காலத்துக்கு வட்டி மீதான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதே காலத்தில் வட்டி முழுவதையும் தள்ளுபடி செய்தால் அந்தத் தொகை ரூ.6 லட்சம் கோடியாகஇருக்கும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதம் முழு வட்டித் தொகையை ரத்து செய்தால் அது வங்கிகளின் நிதி நிலையை கடுமையாகப் பாதிக்கும் என்றும், வங்கிகளால் தொடர்ந்து செயல்பட முடியாத சூழல் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கரோனா காலத்தில் கடன்பெற்ற எந்த வாடிக்கையாளருக்கும் வட்டி மீதான வட்டி விதிக்கப்படவில்லை என அரசு சார்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டிருந்ததை நீதிமன் றம் ஏற்றுக் கொண்டது.

வட்டி சலுகை அளிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட துறைக்கு வட்டி சலுகை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவும், எந்தத் துறைக்கு அளிக்க வேண்டும் என்பதை அரசுதான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x