Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM

234 தொகுதிகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு - தமிழக தேர்தல் களத்தில் 4,218 வேட்பாளர்கள் : கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 13 பேர் போட்டி; சின்னங்களும் ஒதுக்கீடு

தமிழகத்தின் 234 தொகுதிகளுக் குமான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இறுதிநிலவரப்படி அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகள், சிறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 4,218வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 13 பேர் களத்தில் உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் ஆகியவை ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 12 முதல் 19-ம் தேதி வரை நடந்தது. இதில் 6,183 ஆண்கள், 1,069 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் என7,255 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் 22 ஆண்கள், 1 பெண் என 23 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, மார்ச் 20-ம் தேதி காலை 11 மணிக்கு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொதுப் பார்வையாளர்கள், மனுக்கள் பரிசீலனை தொடர்பான பணிகளை கண்காணித்தனர்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மனுக்கள், ஒன்றுக்கு அதிகமாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஆகியவை நிராகரிக்கப்பட்டன.இறுதி நிலவரப்படி, மொத்தமாக தாக்கல் செய்யப்பட்டிருந்த 7,255 வேட்புமனுக்களில், 4,512 மனுக்கள் ஏற்கப்பட்டிருந்தன. 2,743 மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அதேபோல, கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் தாக்கலான 23 மனுக்களில், 13 மனுக்கள் ஏற்கப்பட்டு 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

திரும்பப் பெறும் அவகாசம்

இந்நிலையில், வேட்புமனுக் களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நேற்று மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. மனுதாக்கல்செய்த பலரும் தங்களது வேட்புமனுக்களை நேற்று மாலை 3 மணி வரை திரும்ப பெற்றனர்.

இதையடுத்து, மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிமுக,திமுக கூட்டணிக் கட்சிகள், சிறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைவேட்பாளர்கள் என மொத்தம்4,218 வேட்பளர்கள் களத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இறுதியாக 13 பேர் களத்தில் உள்ளனர்.

இதன் அடிப்படையில் அந்தந்ததொகுதிகளின் தேர்தல் நடத்தும்அலுலர்கள் இறுதி வேட்பாளர் பட்டியலை தங்கள் அலுவலகத்தில் வெளியிட்டனர். இறுதி வேட்பாளர் பட்டியலுடன் வேட்பாளர்களுக்கான சின்னமும் அறிவிக்கப்பட்டது.

குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்கள், பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன. சுயேச்சைகளுக்கு 5 சின்னங்கள் வழங்கப்பட்டு, அதில் ஒன்றை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஒரே சின்னத்தை பலர் கேட்கும் பட்சத்தில் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கெனவே தனி சின்னம் கோரிய நிலையில், அக்கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அதேபோல, எஸ்டிபிஐ கட்சிக்கு கூட்டணி கட்சியான அமமுகவின் சின்னமான குக்கர் ஒதுக்கப்பட்டது.

முழு வேட்பாளர் நிலவரம்

ஒவ்வொரு தொகுதியிலும், வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இறுதி செய்து வருவதால், இறுதியாக களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் நிலவரம் முழுமையாக இன்று காலை வெளியாகும் என தெரிகிறது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பிரச்சாரம் தொடர்பாக மேலும் பல கட்டுப்பாடுகளை விதிக்கும் என தெரிகிறது. இவற்றை நடைமுறைப்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் தயாராகி வருகின்றனர்.

பிரச்சாரம் ஏப்ரல் 4-ம் தேதி முடிவடைகிறது. வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாகும்.

வேட்பாளர் பட்டியலை அதிகாரிகள் இறுதி செய்து வருவதால், இறுதியாக களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் நிலவரம் முழுமையாக இன்று காலை வெளியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x