Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM

சென்னையில் தனியார் மருத்துவமனையில் புகுந்து - நகை பறித்த சம்பவத்தை விசாரித்த நிலையில் இரட்டைக் கொலை வழக்கில் துப்பு துலங்கியது : பிரபல ரவுடி உட்பட 6 பேர் சிறையில் அடைப்பு

மருத்துவமனைக்குள் புகுந்து வழிப்பறி செய்த வழக்கை துப்பு துலக்கியபோது இரட்டை கொலை வழக்கு தொடர்பாக துப்பு துலங்கியுள்ளது. இதுதொடர்பாக பிரபல ரவுடி உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை நந்தனம் விரிவு பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 13-ம் தேதி இரவு சிகிச்சை பெறுவதுபோல புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் இரவுப் பணியில் இருந்த 4 செவிலியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டிசங்கிலி, வளையல், கம்மல், மோதிரம் உட்பட சுமார் 21 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்களை பறித்ததுடன், மருத்துவருக்கு சொந்தமான காரையும் எடுத்துக் கொண்டு தப்பியது.

இதுகுறித்த புகாரின்பேரில் சைதாப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், கொள்ளையில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம் கல்லர் குளம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற ராக்கப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளான மயிலாப்பூர் பல்லக்கு மாநகரை சேர்ந்த வெங்கடேசன் என்ற கறுக்கா வெங்கடேசன், கோட்டூர்புரத்தை சேர்ந்த நெல்சன், அனகாபுத்தூர் சாந்தி நகரை சேர்ந்த சீனிவாசன், அதேபகுதியை சேர்ந்த ஏழுமலை என்ற ரஜினி ஏழுமலை, சிவகங்கை, உடையன் குளம் ராஜசிங்கம் என்ற ராஜா என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இரட்டை கொலை

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் 6 பேரும் சேர்ந்து நடத்திய இரட்டை கொலை குறித்தவிவரம் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

தற்போது கைது செய்யப்பட்ட ரவிக்குமார் உட்பட 6 பேரும் சேர்ந்துகடந்த 9-ம் தேதி இரவு வேளச்சேரி பிரதான சாலையில் உள்ளகாலி இடத்துக்கு தங்களுடைய முன்னாள் கூட்டாளியான அண்ணாதுரை என்பவரையும், அவரதுநண்பரான தங்கபாண்டி என்பவரை யும் வரவழைத்துள்ளனர். அங்கு அவர்களுக்குள் பணத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேரும் சேர்ந்து இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

பின்னர், உடல்களில் கல்லைக் கட்டி, ஆளுநர் மாளிகை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து வருவாய் துறையினர் முன்னிலையில் சடலங்கள் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ரவிக்குமார் மற்றும் அவரதுகூட்டாளிகளிடம் இருந்து நகை, கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரவிகுமார் மீது ஏற்கெனவே 5 கொலை வழக்குகள் உள்ளன.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

கொலைக்கான காரணம்

இரட்டை கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் கூறியது:

2015-ல் ஆவடியில் அரசியல் கட்சி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர், கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றதால், எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த நபர் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக தற்போது கொலையான அண்ணாதுரையிடம் குறிப்பிட்டதொகையை பேரமாக பேசியுள்ளார். இதன் தொடர்ச்சியாக கவுன்சிலர் கொலை செய்யப்பட, அதற்காக பேரம் பேசிய தொகையைஅண்ணாதுரையும், தங்கபாண்டியும் கூலிப்படையினரிடம் தரவில்லை என தெரிகிறது. இதுதொடர்பான விரோதத்தில் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x