Published : 18 Mar 2021 03:13 AM
Last Updated : 18 Mar 2021 03:13 AM

குடும்ப நிகழ்வுகள், அரசியல் கூட்டங்களால் கரோனா அதிகரிப்பு - தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்பது வதந்தி : சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரிக்க குடும்ப நிகழ்வுகள், அரசியல் கூட்டங்களே காரணமாக உள்ளன. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும்நிலையில், சென்னை அரசு பொதுமருத்துவமனையில் கரோனாசிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் குருநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சிறப்பு அலுவலர் வடிவேலு, இணை இயக்குநர் சம்பத்குமார், மருத்துவமனை டீன் தேரணிராஜன், கரோனா பிரிவு துறை தலைவர் ஜாகிர் உசேன், மருத்துவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கரோனா பரவலைத் தடுக்கதேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ளதுபோல் கரோனா பரவல் மகாராஷ்டிராவில் அதிகமாக உள்ளது. இதேபோல பஞ்சாப், கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. அதில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் ஒரேநாளில் 7 ஆயிரம்தொற்று பாதிப்புகளை பார்த்திருக்கிறோம். அதை ஒப்பிடுகையில் தற்போது 1,000-க்கும் குறைவாகவே தொற்று பாதிப்புள்ளது. ஆனாலும்,இது கவலை அளிக்கிறது. பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் அலட்சியமாக உள்ளனர். நமக்கு கரோனா தொற்று வராதுஎன்று பொதுமக்கள் நினைக்கின்றனர். இது தவறானது.

தமிழகத்தில் கடந்த மாதம் திருமணம், பிறந்தநாள், இறப்பு நிகழ்வுகள் ஆகியவையே கரோனா தொற்று அதிகரிக்க காரணமாக இருந்தன. இந்த மாதத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், கூட்டங்கள் காரணமாக உள்ளன. இதுபோன்ற நிகழ்வுகளில் முகக் கவசம்அணியாமல், சமூக இடைவெளியைகடைபிடிக்காமல் பங்கேற்கின்றனர். பொது சுகாதார வழிமுறைகள் அனைவருக்கும் பொருந்தும். அவற்றை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும், கைகளை கழுவாமலும் இருந்தால்கண்டிப்பாக வைரஸ் பரவும். பள்ளிகள், வங்கிகள், குடியிருப்புகள், கலாச்சார கூட்டங்கள், பொது போக்குவரத்து போன்றவற்றில் நிலையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் 3,400-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மையங்களில் முன்களப் பணியாளர்கள், முதியவர்கள், இணை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 16 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், தஞ்சாவூரில் கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. சென்னையில் தேனாம்பேட்டை, அண்ணாநகர், அடையாறு, அம்பத்தூர், வளசரவாக்கம் பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழகத்தில் 2 வாரத்துக்கு முன்பு 450 ஆக இருந்த கரோனா தொற்று பாதிப்பு இன்று 900 ஆக மாறியுள்ளது. கரோனா தொற்று ஏறுமுகமாக உள்ளது. எனவே யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x