Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

நீட் தேர்வு ரத்து, பூரண மதுவிலக்கு, மீண்டும் சட்ட மேலவை : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

நீட் தேர்வு ரத்து, பூரண மதுவிலக்கு ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம், மீண்டும் சட்ட மேலவை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை 11.30 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டார். காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் சிரிவல்ல பிரசாத், முன்னாள் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு, உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திறமையும், வலிமையும், அர்ப்பணிப்பும் கொண்ட தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மாவட்டந்தோறும் ஆண்டுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள சிறந்த 500 இளைஞர்கள், இளம் பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உணவு, உறைவிடம் வழங்கி, 3 ஆண்டுகளுக்கு குடிமைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயிற்சி வழங்கி பணியிலமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களுக்குச் சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துவோம். விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் 3 விவசாயச் சட்டங்களுக்குப் பதிலாக, தமிழகத்தில் விவசாயிகளைப் பாதுகாக்கும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 7.5 சதவிகிதம் ஒதுக்கீட்டை 10 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படுவதோடு, அதனை அஞ்சல் துறை மூலம் நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயில்களில் இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் உதவித் தொகை பெறுவோர் குடும்பத் தலைவராக இருந்தால், அவர்களது வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் புதிய மின் திட்டங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படும். மாதம் ஒருமுறை விசைத் தறியாளர்களுக்கு மின் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகளுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்த, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்தங்கள் செய்யப்படும்.

இவ்வாறு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x