Published : 16 Mar 2021 03:13 AM
Last Updated : 16 Mar 2021 03:13 AM

என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு? : வில்சன் தமிழ்நாடு அனைத்து வகைமாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்.

உயர்த்தப்பட வேண்டிய உதவித்தொகை: மாற்றுத்திறனாளிகளுக்கு புதுவையில் ரூ.3,000-மும், தெலங்கானாவில் ரூ.3,012-மும் மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. தீவிர பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்குகிறார்கள். தமிழகத்தில் 1,000 ரூபாய்தான் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை அவர்களின் மருத்துவச் செலவுக்குக்கூட போதியதாக இருப்பதில்லை. மருத்துவரீதியாகத் தொடர்ந்து பாதுகாவலர் உதவியுடன் பராமரிக்கப்பட வேண்டிய சிறப்புப் பிரிவினரின் பராமரிப்பாளர் உதவித்தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

கவனிக்கப்பட வேண்டிய கல்வி: அரசமைப்புச் சட்டம் 21-ஏ வழங்கியுள்ள கல்வி அடிப்படை உரிமை கிடைக்கப் பெறாத சுமார் 50% மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையை மாற்ற அனைத்து ஒன்றியங்களிலும் அரசே மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குச் சிறப்புப் பள்ளியை நேரடியாக நடத்துவதோடு, அனைத்து மாவட்டங்களிலும் காதுகேளாதோர், பார்வையற்றோருக்குச் சிறப்புப் பள்ளிகள், உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கிட வேண்டும். உயர் கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டப்படியான 5% இடத்தை உறுதிப்படுத்துவதோடு, கல்விக் கட்டணத்தையும், இதர செலவினங்களையும் அரசே ஏற்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்புக் கல்வி ஒழுங்காற்றுச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.

வேலைவாய்ப்பில் தனிக் கவனம்: அரசுத் துறைகளில் 4% இடஒதுக்கீடு வழங்குவதில் வெளிப்படைத்தன்மை தேவை. ஆண்டுதோறும் சட்டமன்றத்தில் இதுகுறித்த அறிக்கை தாக்கல்செய்யப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகள் இடஒதுக்கீட்டில் ஒன்றிய அரசைப் போலவே இனச் சுழற்சி முறையைப் பின்பற்ற வேண்டும். தனியார் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்’போல பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு வேலை உறுதித் திட்டத்தை உருவாக்க வேண்டும். பட்டப் படிப்பு படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தரப் பணி கிடைக்கும்வரை மாதம் ரூ.3,000-மும், பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.5,000-மும் வேலை இல்லாக் கால நிவாரணமாக வழங்க வேண்டும்.

மருத்துவம்: மாற்றுத்திறனாளிகளுக்குப் பயன்படும் வகையில் ஆரம்ப சுகாதார நிலைய அளவில் அவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் கிடைக்கச் செய்ய வேண்டும். அங்கு முடநீக்கியல், பேச்சுப் பயிற்சிக்குச் சிகிச்சையாளர்கள் நியமிக்க வேண்டும். இதேபோல் மாற்றுத்திறனாளிகளின் நிலை குறித்த துல்லியமான தகவல் களஞ்சியம் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு முகாம்கள் நடத்திப் பல்நோக்கு அடையாளச் சான்று வழங்கி, பயன்பாட்டுக்குக் கொண்டுவர உரிய நிதி ஒதுக்க வேண்டும்.

தடையற்ற பயணத்துக்கு வழிசெய்ய வேண்டும்: அனைத்து அரசு நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட அனைத்திலும் மாற்றுத்திறனாளிகள் சென்றுவரும் வகையில் தடையற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் செல்வதற்கு வசதியாக சாய்வுத்தளங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இணைப்புச் சக்கரம் பொருத்திய வாகனம் ஒரு காலில் மட்டும் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணிக்கும்படி மறுவடிவமைக்கப்பட்ட பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

அடிப்படை வசதிகளை உறுதிசெய்தல்: மாற்றுத்திறனாளிகள் திருமண உதவித்தொகை ரூ.2 லட்சமும், மாற்றுத்திறனாளிகளாக தம்பதியினர் இருவருமே இருக்கும்பட்சத்தில் ரூ.3 லட்சமும் உதவித்தொகையாக வழங்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வீடு என்னும் இலக்கை முன்வைத்துக் குடிசை மாற்று வாரியத்தில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வீடு வழங்க வேண்டும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இருக்கும் குடும்பங்களுக்கு வாடகை வீடு கிடைக்காத சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சுயதொழில்கள் தொடங்கி நடத்துவதற்கு மானியத்துடன் கூடிய, வட்டியில்லாக் கடன் வழங்கப்பட வேண்டும்.

விளையாட்டுத் துறையில் மாற்றுத்திறனாளிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்: சிறப்புத் திறன் விளையாட்டுக்களை ஊக்குவிக்க பாரா ஒலிம்பிக், பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட், சக்கர நாற்காலி கிரிக்கெட் ஆகியவற்றில் திறமையான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் வகையில் உரிய நிதி ஒதுக்கி மாவட்ட சிறப்பு விளையாட்டுக் கழகங்களை உருவாக்கிட வேண்டும். தேசிய, சர்வதேச அளவில் தேர்வுசெய்யப்பட்ட வீரர்களுக்கு பயணப்படி, விளையாட்டுக் கருவி, பயிற்சி செலவை அரசே ஏற்க வேண்டும்.

அரசியல் பிரதிநிதித்துவம்: சத்தீஸ்கரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர் பதவி இருக்கிறது. அதேபோல் தமிழகத்திலும் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் உள்ளாட்சி அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

சமூகப் பாதுகாப்பு: ஆதரவற்ற பெண் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்புக்கு, மாவட்டத் தலைநகரங்களில் உணவுடன் கூடிய விடுதி திறக்க வேண்டும். மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் தாக்குதலைத் தடுக்கும் வகையில், சிறப்பு நிதி ஒதுக்கி விழிப்புணர்வு பிரச்சாரத் திட்டம் தொடங்க வேண்டும். அத்தகைய குற்றம்புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x